பக்கங்கள்

01 மே 2010

சுறா,திரை நோக்கு.




மீனவ கிராமத்தில் வசித்துவரும் விஜய்க்கு, தன் பகுதியில் உள்ள மக்கள் அனைவருக்கும் நல்ல வீடு கட்டித்தர வேண்டும் என்பது லட்சியம். ஆனால் வழக்கம் போல் வில்லன் விஜய்யின் இந்த ஆசைக்கு குறுக்காக வருகிறான். அந்த மீனவ கிராமத்தில் இருக்கும் மக்களை வெளியேற்றிவிட்டு, அந்த இடத்தை அபகரித்து கொள்ள திட்டம் போடுகிறான். பின் சுறாவான விஜய் எப்படி வில்லனை வேட்டையாடி
தன் பகுதி மக்களுக்கு வீடு கட்டித்தருகிறார் என்பது மீதிக்கதை. எத்தனையோ படங்களில் நாம் பார்த்து சலித்த கதைதான் என்றாலும், அதை விஜய்கேற்ற விதத்தில் கமர்ஷியல் மசாலா தூவி புதுப்படையலாக தந்திருக்கிறார் இயக்குனர். கடலுக்கு சென்ற மீனவர்களில் எல்லோரும் வந்துவிட, சுறா மட்டும் வரவில்லை என அனைவரும் தவித்துக்கொண்டிருக்க, அட்டகாசமாக கடலுக்குள் இருந்து விஜய் தோன்றும் ஆரம்பக்காட்சியில் கொளுத்தப்படும் 'சரவெடி திரைக்கதை' கடைசிவரை வெடித்துகொண்டே இருக்கிறது, சில இடங்களில் ஆயிரம் வாலா போலவும், சில இடங்களில் புஸ் எனவும்...

ஓப்பனிங் குத்துப்பாடல், அதிரடி ஐந்து சண்டைக்காட்சிகள், பரபரப்பான பஞ்ச் டையலாக்குகள், ஸ்டையிலான நடனங்கள், பிரம்மாண்டமான பாடல் அரங்குகள், என வழக்கமான விஜய் படத்தில் என்னென்ன இருக்குமோ அது அத்தனையும் படத்தில் இருக்கிறது.ஆனால் கொஞ்சம் சுவாரஸ்யத்தோடு...குப்பத்து மக்கள் விஜயைப்பார்த்து பேசும் டயலாக்குகள், விஜய் ஸ்கீரினை பார்த்து பேசும் வசனங்கள் என அத்தனையிலும் விஜயின் அரசியல் ஆசை தெளிவாய் தெரிகிறது. விஜய் பேசும் பஞ்ச் டயலாக்குகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு ரூபாய் கொடுத்தால் போதும்,இயக்குனர் இந்த ஒரே படத்தில் லட்சாதிபதி ஆகிவிடுவார்.

இடைவேளையின் போது விஜய் தப்பிப்பதாக காட்டப்படும் காட்சியில் காதில் பூ சுற்றுவார்களோ என நினைத்தால், உண்மையிலேயே அந்தக்காட்சி நம்பும்படி அமைக்கப்பட்டிருப்பது டைரக்டர் டச். மற்றபடி தனி ஆளாக விஜய் நூறு கோடி ரூபாய் சரக்கை கடத்தி சென்று பாம்பேயில் விற்று வருவது, பின் அதனைத்தொடரும் காட்சிகள் எல்லாம் காதில் பூ அல்ல.. பூக்கடை வைத்திருக்கிறார்கள். லாஜிக் எல்லாம் பார்க்காதீர்கள் என்று முடிந்த அளவு மேஜிக் காட்டி அனுப்புகிறார்கள்.

விஜய் என்ற ஒற்றை மனிதன் இவ்வளவு பெரிய சுறாவை தன் தோளில் தூக்கி சுமந்திருக்கிறார். டயலாக் டெலிவரியிலும், நடன அசைவுகளிலும், சண்டை காட்சிகளிலும் விஜய் பின்னி பெடலெடுகிறார். குறிப்பாய் தன் மக்களிடம் வீடு எரிந்து போனவுடன் பேசும் காட்சியில் விஜய் அசத்துகிறார். கண் தெரியாத தம்பதிகளிடம் விஜய் பேனா வாங்க்கும் காட்சியும் டச்சிங். விஜய் தன் ரசிகர்களுக்கு "சுறா" விருந்து படைத்திருக்கிறார்.ஆனாலும் இது எத்தனை நாளைக்கு? விஜய் நீங்க கண்டிப்பா அடுத்த கட்டத்துக்கு போயே ஆகணும்.

வெறும் வெள்ளைப்பதுமையாக தமன்னா.. வழக்கமான தமிழ்சினிமா கதாநாயகி என்னவெல்லாம் செய்வாறோ அதையெல்லாம் செய்கிறார். இரண்டு சந்திப்புகளிலேயே விஜய் மீது காதல் கொள்வது, அவ்வப்போது ரொமான்ஸ் என தமன்னாவிற்கு பெரிதாய் வேலையில்லை. சமீபகாலத்தில் தமன்னா இவ்வளவு மோசமாக நடித்த படம் இதுவாகத்தான் இருக்கும். வெள்ளையாக காட்டுகிறேன் பேர்வழி என்று சுண்ணாம்புசுவர் போல் காட்டியிருக்கிறார்கள். பாடல்களிலும் தமன்னா பெரிதாய் கவரவில்லை.

வில்லன் அட்டகாசமான தோற்றத்தில் அசத்துகிறார். அவருக்கு லிப் சிங்க் ஆகும்படி டயலாக் சொல்லிக்கொடுத்திருக்கலாம். அவர் பேசுவதற்கும், வசனங்களுக்கும் சம்மந்தமே இல்லாமல் இருக்கிறது. படத்தின் மிகப்பெரிய பிளஸ் வடிவேலுதான் கை விலங்கிட்ட ரெளடியிடம் இவர் மாட்டிக்கொண்டு தவிக்கும் காட்சி ரசிகர்களின் வயிறை பதம் பார்ப்பது உறுதி. வெண்ணிற ஆடை மூர்த்தியின் கச்சேரியில் இவர் செய்யும் சேஷ்டைகள் குபீர் சிரிப்பை வரவழைக்கும். விஜய்க்கு இணையாக ரசிகர்ககளின் கைத்தட்டலை பெறும் ஆள் வடிவேலுதான்.

இயக்குனர் ராஜ்குமார் பெரிதளவில் கதை சொல்லவில்லை என்றாலும், திரைக்கதையில் தொய்வு ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறார். விஜய்க்கான படத்தில் இயக்குனரை பெரிதும் எதிர்பார்க்க முடியாது என்பதால் டைரக்டர் டச் காட்சிகள் மிகக்குறைவு. வசனங்களில் பொறி பறக்க வைத்திருக்கிறார். ஒளிப்பாதிவாளர் ஏகாம்பரம் சுறாவை திமிங்கலம் ரேஞ்ஜ்'க்கு மிகைப்படுத்தி காட்டியிருக்கிறார். சுறாவின் வேட்டைக்கு பற்களாய் உதவியிருக்கிறார். கடல் சார்ந்த பகுதிகள் அவ்வளவு அழகு அதிலும் இரவு நேர காட்சிகளில் லைட்டிங்கும், கேமராக்கோணங்களும் ரசனை. விஜய்யை அவ்வளவு அழகாக காட்டியவர் தமன்னா விஷயத்தில் கோட்டை விட்டிருப்பது ஏனோ?


சுறாவின் அசுரப்பாய்ச்சலுக்கு உதவியிருக்கும் மற்றொருவர் எடிட்டர் டான்மேக்ஸ். சண்டைக்காட்சிகளிலும், பாடல் கட்டிங்குகளிலும் இவர் காட்டி இருக்கும் நேர்த்தி பாராட்டத்தக்கது.மணி சர்மா தெலுங்கு ட்யூன்களையே பயன்படுத்தி இருந்தாலும் 'நான் நடந்தால் அதிரடி' பாடலிலும், 'தஞ்சாவூர் ஜில்லாக்காரி' பாடலிலும் ரசிகர்களை ஆட்டம் போட வைத்திருக்கிறார். ஆனாலும் மனதை வருடும் ஒரு மெலடி பயன்படுத்தி இருக்கலாம். சுறாவை தன்னுடைய அரசியல் சிம்மாசனத்தை நோக்கிய பயணத்தில் படிக்கெட்டாக உபயோகப்படுத்தி இருக்கிறார் விஜய். சமீப காலத்தில் வெளிவந்த விஜய் படங்களோடு ஒப்பிடுகையில் நிச்சயமாய் இந்த சுறாவை ரசிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக