பக்கங்கள்

31 மார்ச் 2013

நிறைவான வேடம்,நிம்மதியான வாழ்க்கை-திரிஷா

இனி படங்களின் எண்ணிக்கை முக்கியமல்ல. நிறைவான வேடங்கள், நிம்மதியான வாழ்க்கைதான் முக்கியம் என்கிறார் த்ரிஷா. தமிழ் சினிமாவில் 2002-ல் அறிமுகமாகி, பத்தாண்டு காலத்தை முன்னணி கதாநாயகியாகவே வெற்றிகரமாகக் கடந்தவர் த்ரிஷா. இன்றைய சூழலில் இது ஒரு சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். இப்போது ஜெயம் ரவியுடன் பூலோகம், ஜீவாவுடன் என்றென்றும் புன்னகை, கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட ரம் போன்ற படங்களில் நடிக்கிறார் த்ரிஷா. பத்தாண்டுகள் முன்னணி கதாநாயகியாக நடிப்பது குறித்து அவர் கூறுகையில், "சினிமாவில் கதாநாயகி வாய்ப்பு கிடைப்பது அத்தனை சுலபமல்ல. எனக்குக் கிடைத்த வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள நிறைய போராட வேண்டியிருந்தது. தொடர்ந்து பத்து ஆண்டுகளாக சினிமாவில் அதுவும் முன்னணி கதாநாயகி இடத்தில் இருப்பது பெருமை, என் அதிர்ஷ்டம். ஒரு காலத்தில், ராத்திரி - பகல் என்று பார்க்காமல் ஸ்டுடியோக்களில் முடங்கிக் கிடந்திருக்கிறேன். காரணம், வாய்ப்புகள் பறிபோய்விடக் கூடாதே என்பதால். இன்று என் மனசு விரும்பும் பாத்திரங்களில் நடிக்கிறேன். கதை பிடிக்காவிட்டால் எவ்வளவு பணம் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன். அந்த பரபரப்பும் நிம்மதியற்ற சூழலும் இல்லாத நிலையில், முன்னணி நாயகி என்ற அந்தஸ்தை அனுபவித்து நடிக்கிறேன். இனி எண்ணிக்கை முக்கியமில்லை. இருக்கிற பெயரை தக்க வைத்துக் கொண்டு, நல்ல படங்களில் நடிக்க வேண்டும்," என்றார்.

26 மார்ச் 2013

என் கனவு ஈடேறவில்லை-காஜல்

நடிகையானதால் படிப்பை தொடர முடியவில்லை என்று காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தற்போது இவர் தமிழில் இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். அவை கார்த்தியின் ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’, விஜய்யின் ‘ஜில்லா’ அடங்கும். இது குறித்து காஜல் அகர்வால் கூறியதாவது: அதிகம் படிக்க வேண்டும் என்பது என்னுடைய சிறுவயது கனவு. ஆனால் அது நனவாகவில்லை. நான் பத்தாம் வகுப்பு படித்த போதே சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்ததால் படிப்பை தொடர முடியவில்லை. மேலும் எம்.பி.ஏ. படிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டதும் நிறைவேறவில்லை. ஆனாலும் அந்த லட்சியத்தை கைவிடுவதாக இல்லை. தபால் மூலம் எம்.பி.ஏ. படிக்க திட்டமிட்டு உள்ளேன். சினிமாவில் கல்லூரி மாணவி வேடங்களில் நடிக்க எனக்கு மிகவும் பிடிக்கும். கல்லூரி மாணவி வேடங்கள் என்றால் உடனே ஒப்புக்கொள்கிறேன். குறிப்பாக எம்.பி.ஏ. மாணவி கதாபாத்திரத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக இருக்கிறது. இயக்குனர்களிடம் படத்தில் எம்.பி.ஏ. பட்டம் வாங்குவது போன்று ஒரு காட்சி வைக்கும்படி வற்புறுத்தி வருகிறேன் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.