பக்கங்கள்

14 ஆகஸ்ட் 2013

பி.சுசீலாவுக்கு பாராட்டு விழா!

தூத்துக்குடியில் பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. காந்திய சேவா மன்ற நிறுவனர் என்.வீ.ரஜேந்திரபூபதி பாடகி சுசீலாவுக்கு தங்க சங்கிலி பரிசளித்தார். விழாவில் பாடகி சுசீலா, மக்களின் மனம் கவர்ந்த பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்வித்தார். தொடர்ந்து ரசிகர்களிடையே பேசிய அவர், கடலின் ஆழத்தை தெரிந்து விடலாம். ஆனால் இசையின் ஆழம் தெரியாது. அலைகள் ஓய்வது இல்லை. அதே போன்று பாடல்களும் ஓய்வது இல்லை. 50 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள பாடல்களாக இருந்தாலும் மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. தூத்துக்குடி மக்கள் டி.எம்.சவுந்தரராஜனுக்கு பாராட்டு விழா நடத்தி கவுரவித்தீர்கள். கடவுளின் அனுகிரகத்தால் நான் இங்கு வந்து உள்ளேன். நான் முதன் முதலில் ‘எதுக்கு அழைத்தாய், ஊதல் ஊதி ஜாடை காட்டி..’ என்ற பாடல் மூலம் பாடகியானேன். அதன்பிறகு என்னை மிகவும் பிரபலம் அடைய செய்த பாடல்கள் பல உண்டு. குறிப்பாக, பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் உள்ள செல்வமன்றோ.., உன்னை கண்தேடுதே... அன்பில் மலர்ந்த நல் ரோஜா என்னும் தாலாட்டு பாடல்கள் என்னை பிரபலப்படுத்தின. மேலும் மயங்குகிறாள் ஒரு மாது... கங்கைக்கரை தோட்டம், அன்புள்ள அத்தான், அவள் என்னைத்தான், உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன், 16 வயதினிலே, கண்ணுக்கு மையழகு போன்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் என்னை மிகவும் பிரபலப்படுத்தியது. எல்லோரும் இசைக்காக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அதில் நாங்கள் ஒரு கருவிதான் என்றார். விழாவின்போது அவருக்கு மலர் கிரீடம் அணிவித்து, அவரது அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம் ரொக்கமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து, திரைப்படங்களில் பி. சுசீலா பாடிய பாடல்களை அவரது மருமகள் சந்தியா, மருத்துவர் பிரேம சந்திரன் உள்ளிட்ட பாடகர்கள் மேடையில் பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர். பின்னர், விழா மலர் வெளியிடப்பட்டது. வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் செங்குட்டுவன், தொழிலதிபர்கள் விநாயகமூர்த்தி, டி.ஏ. தெய்வநாயகம், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி துணைப் பொது மேலாளர் கிருஷ்ணகுமார், காந்திய சேவா மன்ற நிர்வாகிகள் பரமசிவன், ராஜேந்திரபூபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

02 ஆகஸ்ட் 2013

இயக்குனர் சேரனுக்கு இப்படி ஒரு மகள்!

காதலை பிரிக்கப் பார்க்கிறார், காதலனை கொல்ல முயல்கிறார்: டைரக்டர் சேரன் மகள் போலீசில் புகார்தன்னை தன் காதலனிடம் இருந்து பிரிக்கவும், காதலனை கொலை செய்யவும் தனது தந்தை முயற்சி செய்வதாக இயக்குனர் சேரனின் மகள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். குடும்பப் பாங்கான படங்கள் எடுப்பதில் வல்லவர் சேரன். அவரது மனைவி செல்வராணி. அவர்களுக்கு நிவேதா மற்றும் தாமினி(20) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். சேரன் சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சேரனின் 2வது மகள் சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் மீடியா 3-ம் ஆண்டு படித்து வருகிறார். அவர் இன்று காலை 11 மணிக்கு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். தனது தந்தை தன்னையும், தனது காதலன் சந்துருவையும் பிரிக்க முயற்சிப்பதாக புகார் அளித்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சூளைமேட்டைச் சேர்ந்த சந்துரு என்பவரை நான் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வருகிறேன். அவர் சினிமாவில் உதவி இயக்குனராகவும், டான்சராகவும் உள்ளார். சினிமா விழா ஒன்றுக்கு என் தந்தையுடன் சென்றபோது தான் சந்துரு அறிமுகமானார். பிறகு நாங்கள் காதலிக்க ஆரம்பித்தோம். எங்கள் காதல் பற்றி என் தந்தைக்கு தெரிய வந்தது.முதலில் அவர் எங்கள் காதலை எதிர்க்கவில்லை. படிப்பு முடிந்த பிறகு நீ சந்துருவையே திருமணம் செய்து கொள்ளலாம் என்றார். ஆனால் கடந்த 2 மாதங்களாக எங்கள் வீட்டில் என் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். என் தந்தையும், அவருக்கு நெருக்கமான திரைத்துறையினரும் சேர்ந்து சந்துருவை மறந்துவிடும்படி என்னை மிரட்டி வருகின்றனர். சந்துருவை கொலை செய்ய பல முறை முயற்சி நடந்துள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு என் உடல் நலம் பாதிக்கப்பட்டபோது என் தந்தை வெள்ளைத்தாளில் என்னிடம் கையெழுத்து வாங்கினார். எங்கள் காதலை பிரித்து சந்துருவை கொன்றுவிடுவதாக அவர் மிரட்டுகிறார். என்னை வீட்டில் அடைத்து வைத்திருந்தனர். இன்று காலையில் கல்லூரிக்கு செல்வதாகக் கூறிவிட்டு வந்து சந்துருவின் வீட்டில் தஞ்சம் அடைந்தேன். என் தந்தை எங்கள் காதலை பிரிக்க முயற்சிக்கிறார் என்று சந்துருவின் தாய் மற்றும் அக்காவிடம் கூறினேன். அவர்களுடன் வந்து கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன். என்னை என் காதலனுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றார்.