தூத்துக்குடியில் பிரபல பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. காந்திய சேவா மன்ற நிறுவனர் என்.வீ.ரஜேந்திரபூபதி பாடகி சுசீலாவுக்கு தங்க சங்கிலி பரிசளித்தார். விழாவில் பாடகி சுசீலா, மக்களின் மனம் கவர்ந்த பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்வித்தார். தொடர்ந்து ரசிகர்களிடையே பேசிய அவர்,
கடலின் ஆழத்தை தெரிந்து விடலாம். ஆனால் இசையின் ஆழம் தெரியாது. அலைகள் ஓய்வது இல்லை. அதே போன்று பாடல்களும் ஓய்வது இல்லை. 50 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள பாடல்களாக இருந்தாலும் மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.
தூத்துக்குடி மக்கள் டி.எம்.சவுந்தரராஜனுக்கு பாராட்டு விழா நடத்தி கவுரவித்தீர்கள். கடவுளின் அனுகிரகத்தால் நான் இங்கு வந்து உள்ளேன். நான் முதன் முதலில் ‘எதுக்கு அழைத்தாய், ஊதல் ஊதி ஜாடை காட்டி..’ என்ற பாடல் மூலம் பாடகியானேன்.
அதன்பிறகு என்னை மிகவும் பிரபலம் அடைய செய்த பாடல்கள் பல உண்டு. குறிப்பாக, பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் உள்ள செல்வமன்றோ.., உன்னை கண்தேடுதே... அன்பில் மலர்ந்த நல் ரோஜா என்னும் தாலாட்டு பாடல்கள் என்னை பிரபலப்படுத்தின.
மேலும் மயங்குகிறாள் ஒரு மாது... கங்கைக்கரை தோட்டம், அன்புள்ள அத்தான், அவள் என்னைத்தான், உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன், 16 வயதினிலே, கண்ணுக்கு மையழகு போன்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் என்னை மிகவும் பிரபலப்படுத்தியது. எல்லோரும் இசைக்காக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அதில் நாங்கள் ஒரு கருவிதான் என்றார்.
விழாவின்போது அவருக்கு மலர் கிரீடம் அணிவித்து, அவரது அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம் ரொக்கமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து, திரைப்படங்களில் பி. சுசீலா பாடிய பாடல்களை அவரது மருமகள் சந்தியா, மருத்துவர் பிரேம சந்திரன் உள்ளிட்ட பாடகர்கள் மேடையில் பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர். பின்னர், விழா மலர் வெளியிடப்பட்டது. வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் செங்குட்டுவன், தொழிலதிபர்கள் விநாயகமூர்த்தி, டி.ஏ. தெய்வநாயகம், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி துணைப் பொது மேலாளர் கிருஷ்ணகுமார், காந்திய சேவா மன்ற நிர்வாகிகள் பரமசிவன், ராஜேந்திரபூபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக