பக்கங்கள்

31 மே 2010

உலகிலேயே அதிக எடை கூடிய மனிதருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் திணறல்!


உலகிலேயே மிக அதிக எடையுடைய குண்டு மனிதருக்கு, மருத்துவப் பரிசோதனை செய்ய முடியாமல் டாக்டர்கள் திணறி வருகின்றனர்.
சீனாவின் சோங்கிங் பகுதியைச் சேர்ந்தவர் லியாங் யோங்(30). இவர் பிறக்கும் போது சாதாரண குழந்தையாகத் தான் இருந்தார். 14 வயது முதல் இவரது எடை கணிசமாகக் கூடியது. இந்த வயதில் அவர் 180 கிலோ இருந்தார். உடன் படிக்கும் மாணவர்களின் கிண்டல்களை சமாளிக்க முடியாமல் பள்ளிக்கு செல்வதை கைவிட்டார்.
கடந்த 2000ம் ஆண்டு இவர், இன்டர்நெட் மூலம் ஒரு பெண்ணை காதலிக்கத் துவங்கினார். அந்த பெண்ணின் நிபந்தனைபடி தன் உடல் எடையை 105 கிலோ அளவுக்கு குறைத்தார். பின், அந்த பெண்ணை மணமுடித்தார். தற்போது இவருக்கு ஐந்து வயதில் குழந்தை உள்ளது. திருமணமானதும் இவரது உடல் எடை மீண்டும் கூடிக் கொண்டே வந்து தற்போது 225 கிலோவாகிவிட்டது.
இதன் காரணமாக இவர், "உலகிலேயே அதிக எடை கொண்டவர்' என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். ஒரு நாளைக்கு எட்டு வேளை உணவு சாப்பிடுகிறார். ஒரு வேளைக்கு அரை கிலோ அரிசியில் சாதம் வடித்து சாப்பிடுகிறார். இருப்பினும், இந்த அளவு சாதம் போதவில்லை என்கிறார்.இவரது உருவத்தை வைத்து சிலர், இவரை நாடகத்திலும் சிரிப்பு வேடத்தில் நடிக்க வைத்தனர். கடந்த ஓராண்டாக இவரால் நடக்க முடியவில்லை; படுத்த படுக்கையாகிவிட்டார். தற்போது இவருக்கு சிறுநீரகம், இதயம், கல்லீரல் போன்றவை பாதிக்கப்பட்டுள்ளன. சிகிச்சைக்காக "சிடி' ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் போன்றவற்றை எடுக்க முடியவில்லை.
சம்பந்தப்பட்ட கருவியில் உட்கார வைத்து பரிசோதிக்கும் அளவுக்கு இவரது உருவ அமைப்பு இடம் கொடுக்கவில்லை. அல்ட்ராசோனிக் கருவியின் மூலம் சோதிக்க பைப்பை இவர் உடலில் செலுத்த முடியாத நிலை உள்ளது. இவரது உடல் பருமன் காரணமாக ரத்தம் எடுப்பதற்கு, ஊசியை குத்தக்கூட இவரது ரத்த நாளங்களை கண்டுபிடிக்க முடியாத சிரமம் உள்ளது.
அது மட்டுமல்லாது இவருக்கு சிகிச்சை அளிக்க, மற்றவர்களை காட்டிலும் ஐந்து மடங்கு அளவுக்கு அதிக மருந்தை தர வேண்டிய நிர்பந்தம் உள்ளது. தற்போது இவருக்கு மற்றவர்களைக் காட்டிலும் ஐந்து மடங்கு இன்சுலின் செலுத்தப்படுகிறது.இவரது ஒவ்வொரு உறுப்பும் செயலிழக்கும் அபாயம் உள்ளது. இவரை காப்பாற்ற எந்த அளவுக்கு மருந்து கொடுப்பது என்பது தெரியாத நிலை உள்ளதாக டாக்டர்கள் திணறி வருகின்றனர்.

30 மே 2010

பொறியியல் கல்லூரி மாணவி தற்கொலை!


கேளம்பாக்கம் அருகேயுள்ள தையூரில் எஸ்.எம்.கே. போம்ரா பொறியியல் கல்லூரி உள்ளது. 2 ஆயிரம் பேர் படிக்கின்றனர். மாணவ, மாணவிகளுக்கு தனித்தனி விடுதிகள் உள்ளன. 300 மாணவிகள் விடுதியில் தங்கியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள். இந்த கல்லூரியில் உத்திரபிரதேச மாநிலம் அலிகாரை சேர்ந்த விஜயகுமார் பச்சீஷ்யா என்பவரின் மகள் அனித்ரா (19) முதலாண்டு இ.சி.இ. படித்தார். நேற்று முன்தினம் இரவு அறையில் தனியாக படிக்க விரும்புவதாக அனித்ரா கூறியுள்ளார். அவருடன் தங்கியிருந்தவர்கள் அருகில் இருந்த அறைக்கு சென்று தூங்கினர். நேற்று காலை அனித்ரா இருந்த அறைக்கதவு திறக்கப்படாததால், மாணவிகள் கதவை உடைத்துப் பார்த்தனர். அனித்ரா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இந்த விவகாரம் கல்லூரி முழுவதும் பரவியது. ஆத்திரம் அடைந்த மாணவர்கள் கல்லூரி தலைவரின் உதவியாளர் சதீஷ் கண்ணாவின் அறையை அடித்து உடைத்தனர். கம்ப்யூட்டர், பீரோ மற்றும் ஆவணங்களை சேதப்படுத்தினர். சதீஷ் கண்ணாவை கைது செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். விடுதி வார்டன் நளினி, கேளம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். மாமல்லபுரம் டிஎஸ்பி சம்பந்தமூர்த்தி, கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் அசோகன் ஆகியோர் மாணவர்களை சமாதானப்படுத்தினர். அனித்ராவின் உடலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி மாணவ, மாணவிகள் போலீசாரிடம் கூறியதாவது: கல்லூரி வளாகத்துக்குள் மாணவ, மாணவிகள் ஒருவரோடு ஒருவர் பேசக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. மாணவர்களை கண்காணிக்க கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு அனைத்து வகுப்பறையிலும் கேமரா பொருத்தப்பட்டது. கடந்த வாரம் மாணவர் ஒருவருடன் அனித்ரா பேசியது கேமராவில் பதிவானது. இதைப் பார்த்த கல்லூரித் தலைவர் ஸ்ரீகுமார் போம்ரா, அனித்ராவை அழைத்துத் திட்டினார். ரூ.1000 அபராதம் விதித்தார். நேற்று முன்தினம் மாலை கல்லூரி தலைவரின் உதவியாளர் சதீஷ் கண்ணா, விடுதிக்கு வந்து அனித்ராவை ஆபாசமாக திட்டினார். அந்த மன உளைச்சலில் அனித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்றனர். மாணவி இறந்தது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தந்தை விஜயகுமார் நேற்று கேளம்பாக்கம் வந்தார். தனது மகள் சாவுக்கு கல்லூரி தலைவர் ஸ்ரீகுமார் போம்ரா, அவரது உதவியாளர் சதீஷ் கண்ணா ஆகியோர்தான் காரணம் என்று புகாரில் தெரிவித்தார். கேளம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து, சதீஷ் கண்ணாவை கைது செய்தனர். கல்லூரி தலைவர் ஸ்ரீகுமார் போம்ராவை தேடி வருகின்றனர்.

29 மே 2010

இரண்டு கொடுத்தால் தள்ளுபடி-தமன்னா அதிரடி!



தமிழ், தெலுங்கு திரையுலகில் பிசியான நடிகையாகியுள்ளார் தமன்னா. 'அயன்' படத்தில் சூர்யாவுடனும், 'பையா' படத்தில் கார்த்தியுடனும், 'சுறா' படத்தில் விஜய்யுடனும் நடித்ததின் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார்.
'தில்லாலங்கடி', 'சிறுத்தை', 'அருவா' போன்ற படங்கள் கைவசம் உள்ளன. தெலுங்கில் 2 படங்களில் நடித்து வருகிறார்.
படங்கள் குவிவதால் சம்பளத்தை பெருமளவு உயர்த்தியுள்ளார். ஆரம்பத்தில் ரூ. 25 லட்சம் சம்பளம் வாங்கிய அவர் இப்போது ரூ. 1 1/2 கோடி வரை கேட்கிறார் என்கின்றனர். பெரிய ஹீரோக்களும் தமன்னாவை ஜோடியாக்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்த வளர்ச்சியை அப்படியே தக்க வைத்துக் கொள்ள தமன்னா விரும்புகிறார். இதற்காக சம்பளத்தில் புதிய பேக்கேஜ் முறையை அறிமுகம் செய்துள்ளார். ஒரே கம்பெனி தொடர்ந்து இரு படங்களில் நடிக்க வாய்ப்பு தந்தால் சம்பளத்தில் குறிப்பிட்ட அளவு தள்ளுபடி செய்வதாக கூறியுள்ளார்.
தெலுங்கு நடிகர் அல்லு அரவிந்தின் படக்கம்பெனி சொந்தமாக இரு படங்கள் தயாரிக்கிறது. அதில் ஒரு படத்தில் தமன்னாவை நாயகியாக ஒப்பந்தம் செய்தனர். இன்னொரு படத்திலும் என்னையே நடிக்க வைத்தால் சம்பளத்தில் தள்ளுபடி செய்வதாக கூறினார். இதையடுத்து இரு படத்திலும் தமன்னாவை ஒப்பந்தம் செய்தனர். இதையடுத்து சம்பளத்தில் பல லட்சங்கள் தள்ளுபடி செய்துள்ளார்.
தமிழிலும் இது போல் ஒரே கம்பெனி இரு படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்தால் சம்பளத்தில் தள்ளுபடி செய்வதாக கூறியுள்ளார்.

28 மே 2010

ஒரு நாளைக்கு நாற்பது சிகரெட் புகைக்கும் இரண்டு வயது குழந்தை!

ஒரு நாளைக்கு நாற்பது

சிகரெட் புகைக்கிறதாம் இந்த இந்தோனேசிய நாட்டு குழந்தை,இரண்டே

வயதான இந்தக் குழந்தையின் சாதனை,உலக ஊடகங்களில் முக்கிய அதிர்ச்சியூட்டும் தகவலாக வெளிவந்து கொண்டிருக்கிறது.இது நம்ப முடியாத

உண்மை,நீங்களும் பாருங்களேன்.

27 மே 2010

விஜய், சூர்யா,யாருக்கு செல்வாக்கு அதிகம்?


சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் ரிலையன்ஸ் பிக்பிக்சர்ஸ், தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா, சோனி மியூசிக், சூர்யா, அனுஷ்கா, இயக்குனர் ஹரி, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், ஒளிப்பதிவாளர் ப்ரியன், எடிட்டர் வி.டி. விஜயன், கலை இயக்குனர் கே. கதிர், பாடலாசிரியர் நா. முத்துகுமார், விவேகா எனப் பெரிய நிறுவனங்களும் நட்சத்திரங்களும் இணைந்திருக்கும் படம் சிங்கம். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நிருபர் ஒருவர் வில்லங்கமான ஒரு கேள்வியைக் கேட்டார். ‘சிதம்பரம் பகுதில் ஒரு திரையரங்கில் சிங்கம் இரண்டரை லகரத்துக்கு விலை போயிருப்பதாகவும் இதே திரையரங்கில் விஜய் நடித்து சமிபத்தில் வெளியான ‘சுறா’ 20 லகரத்துக்கே விலை போனதாகவும் ஒரு தகவல். இரண்டு படங்களையும் நீங்கள்தான் வாங்கி வெளியிட்டீர்கள்....இது பற்றி உங்கள் கருத்து என்ன?’ என்று சன் டி.வி சி.இ.ஒ. சரத் சக்ஸேனாவை ஒரு நிருபர் கேட்க; ஒரு நிமிடம் யோசித்த சரத், ‘சிங்கம் பற்றிப் பல திரையரங்குகளில் பேசிக்கொண்டிருக்கிறோம். அது நீங்கள் சொன்னதைவிட ஜாஸ்தியாகவே விலை போகும்’ என பதில் கூறினார்.சூர்யா மார்க்கெட் ஜாஸ்தி என்கிறீர்களா? என மடக்க, மேடையில் அமர்ந்திருந்த சூர்யா, ஞானவேல் ராஜா, ஹரி, தேவி ஸ்ரீபிரசாத், ப்ரியன் உள்ளிட்ட அனைவரும் சக்ஸேனாவுடன் சேர்த்து புன்னகையையே பதிலாகத் தந்தனர்.மற்றோரு நிருபர், விஜய், சூர்யா இருவரில் அனுஷ்கா யாருக்குப் பொருத்தம் என்று சக்ஸேனாவிடம் கேட்க, இந்த கேள்வியும் எனக்குத்தானா என முதலில் தயங்கியவர், இருவருக்குமே அனுஷ்கா அபாரமான பொருத்தம்தான் எனக் கூறி எஸ்கேப் ஆனது நிருபர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் மேடையிலும் சிரிப்பலையைத் தூண்டிவிட்டது.

26 மே 2010

கனகவேல் காக்க,திரை விமர்சனம்.



நீதிபதிக்கு 'ரைட்' சைடில் நின்று, 'ராங்' சைட் தீர்ப்பாகவே கேட்டு ஆத்திரப்படும் டவாலிதான் கரண். கண்ணெதிரே தப்பிக்கும் தாதாக்களுக்கு இந்த டவாலி தரும் ஆஃப் சைட் தீர்ப்புகள்தான் விறுவிறுப்பான திரைக்கதை. படம் நகரும் ஒவ்வொரு வினாடியும், 'டவாலி...சமாளி' என்று பிரார்த்திக்கிறது மனசு. அருவாளுக்கு முதுகு பக்கமும் கூர்மையை வச்ச மாதிரி சுளீர் டைப் வசனங்களும் சேர்ந்து கொண்டதால், தீப்பிடிக்காத குறைதான் தியேட்டரில்!
முதல் காட்சியிலேயே மினிஸ்டரை கொல்ல முயல்கிறார் கரண். அடுத்தடுத்த காட்சியில் கோர்ட். அங்கேயும் அவர்தான். இந்த கொலை முயற்சிக்கு பின்னாலிருப்பது முன்பகையும், முக்க முக்க ஒரு பிளாஷ்பேக்கும்தான் என்று யூகித்தால், அதையும் தாண்டி சமூக அக்கறையை கரணுக்குள் நுழைத்து கேரக்டருக்கு இன்னும் 'வெயிட்' ஏற்றுகிறார் புதுமுக இயக்குனர் கவின்பாலா.
அப்பாவி மூதாட்டி ஒருவரின் 15 லட்சத்தை லபக்கிக் கொள்ளும் ராஜ்கபூர், சரியான சாட்சியங்கள் அமையாததால் விடுதலை ஆகிறார். இன்னொரு சம்பவத்தில் கற்பழிப்புக்கு ஆளான ஏழைப்பெண் ஒருத்தி, நீதிக்கு பதிலாக விபச்சாரி என்று பழி சுமத்தப்பட்டு தண்டனை பெறுகிறார். இப்படி கண்ணை மூடிக்கொண்டு சட்டம் ஒரு தீர்ப்பு எழுதினால், கண்களில் ரத்தம் சிவக்க டவாலி ஒரு தீர்ப்பு எழுதுகிறார். எப்படி, எங்கே, ஏன்? ஆக்ஷன் பிலிம் பார்த்தே பழக்கப்பட்ட அத்தனை ரசிகர்களும் அசுவாரஸ்யமாக எதிர்பார்க்கும் அந்த பிளாஷ்பேக். ஆனால் அதற்குள்ளும் ஒரு ஜீவனை புகுத்தி கண்கலங்க வைத்திருப்பது இயக்குனரின் தனி சாமர்த்தியம்.
பிணமே இல்லாத சவக்குழிக்கு முன் உட்கார்ந்தபடி ஒருவன் சங்கு ஊத, "ஏய் யார்றா அது?" என்கிற ராஜ்கபூருக்கு அது தனக்கான குழிதான் என்பது தெரியவருகிற போது சுவாரஸ்யம் தொற்றிக் கொள்கிறது நமக்கு. தப்பட்டை அடித்துக் கொண்டே அவரை சம்ஹாரம் செய்கிற கரண் தப்பித்து ஓடுவதெல்லாம் பரபரப்பு. ஆனால் அந்த சேசிங், சினிமாட்டிக் கிராஃப்பை தாண்டாமல் நிறைவுறுவதுதான் ப்ச்!
விரட்டி விரட்டி காதலிக்கும் ஹரிப்ரியாவிடம் ஒரு துள்ளல் இருக்கிறது. டிராபிக் கான்ஸ்டபிளை ஏய்ப்பதும், லிப்ட் கொடுக்கிற வழுக்கை தலையனை அடுத்த ஐந்தாவது வினாடியில் அபிக்குட்டி என்று கொஞ்சுவதுமாக செம ரவுசுதான். ஆனால் கதை விறுவிறுப்பாக ஒடிக் கொண்டிருக்கும்போது தலையை நுழைத்து டூயட் பாடுவதுதான் சுத்த போர் பெண்ணே...
ஃப்பிரீக்க்க்க்க்.... என்று சிரித்தபடி வரும் கோட்டா சீனிவாசராவ், தனக்கான கோட்டாவை தாண்டியும் டிராவல் செய்கிறார். ஆனால் அதுகூட தனி சுவாரஸ்யம்தான். "நீ லாயர், லீகல நீ பார்த்துக்கோ. நான் மினிஸ்டர். இல்லீகல நான் பார்த்துக்கிறேன்" என்று சலம்புவதும், "ஐயா" என்று வேலைக்காரன் ஓடிவர, அவனை திரும்பிப் பார்க்கும் மற்றொருவனை "ஐயான்னா நீயாடா?" என்று நெட்டி தள்ளுவதுமாக கோட்டாவின் எடக்கு மடக்கு ஸ்டைலே தனிதான்ப்பா...!
மண்வெட்டி போதும் என்று நினைக்கிற இடத்தில் பொக்லைனே வந்தது மாதிரி, எல்லாமே அதிகப்படிதான் கரண் ஸ்டைல். ஆனால் இந்த படத்தில் அழுவதில் துவங்கி ஆத்திரப்படுவது வரை எந்த காட்சியிலும் கச்சிதத்தை தாண்டவில்லை என்பதால், கரணுக்கு முக்கியமான படம் இது.
பா.ராகவனின் வசனங்களுக்கு வாகாக கன்னத்தை கொடுத்துவிட்டு தடவிக் கொள்கிறது நீதித்துறை. 'இங்க வர்ற சாட்சிகளிடம் பகவத் கீதையை கொடுத்து நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையை தவிர வேறில்லை என்று சத்தியம் வாங்குறீங்களே, ஒரு தடவையாவது இதை நீதிபதிகளிடமோ, வக்கீல்களிடமோ காட்டி சத்தியம் வாங்கியிருக்கீங்களா?' இப்படி படம் நெடுகிலும் யோசிக்க வைக்கிற வசனங்கள்...
பாடல்களில் 'சுத்துகிற பூமியிலே' அற்புதமான மெலடி. பாராட்டுகள் விஜய் ஆன்ட்டனி. 'மின்சாரமே மின்சாரமே' பாடல் இனிமையாக இருந்தாலும் பட வேகத்தை தடுக்கிற ஸ்பீட் பிரேக்கர் என்பதால் உறுத்தல்!
பராசக்தி துவங்கி, விதி, சட்டம் ஒரு இருட்டறை, நீதிக்கு தண்டனை என்று தொடர்கிற நீதிமன்ற பட வரிசையில் கனகவேலும் தன்னுடைய பதிவை உறுதி செய்யும். அதுவும் பெயருக்கேற்ற கூர்மை கொஞ்சமும் குறையாமல்!
-ஆர்.எஸ்.அந்தணன்.

24 மே 2010

ராவணன்,பாடல்கள் ஒரு கண்ணோட்டம்.


உசிரே போகுதே : "இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்தே" என்று மெதுவாக கார்த்திக்கின் குரலில் ஆரம்பிக்கும் பாடல் அக்மார்க் பிளாக் தீம் வகையை சார்ந்தது. "உசிரே போகுதே உசிரே போகுதே. உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையிலே" என்று கார்த்திக் உருகிப்பாடுவது நம்மையும் உருக வைக்கிறது. குரலில் கசியும் ஏக்கத்தை கச்சிதமாக பதிவு செய்திருக்கிறார் ரஹ்மான். சரணங்களின் முடிவில் ஆர்ப்பாட்டமாக ஆரம்பிக்கும் ஹாம்மர் இசை அடுத்த நொடியே அடங்கிப்போவது அட்டகாசம். "அக்கினி பழம்ன்னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி" என்ற வரிகளில் வைரமுத்து கம்பீரமாக அமர்ந்திருக்கிறார். ட்ரம்ஸ்'ஸின் அதிர்வுகள் ஏற்படுத்தும் உணர்வுகளை அனுபவித்தால் மட்டுமே புரியும். அலட்டிக்கொள்ளாமல் ஏதோ ஒரு பய உணர்வை ஏற்படுத்தும் வித்தையை ரஹ்மான் இந்த பாடலில் புரிந்திருக்கிறார். வீரா வீரா : அதிவேக எக்ஸ்பிரஸ் ஒன்றின் வேகத்தை வாத்தியக்கருகளின் மூலம் ஓடவிட்டிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். “வீரா வீரா, தீரா தீரா” என்று விஜய் பிரகாஷின் குரல் உச்சஸ்தாயில் எகிறி எகிறி அடிக்கிறது. "ராமந்தேன் ராவணந்தேன்" என்று இராமத்து ஸ்டைலில் குரல் ஒலிக்க, பின்னணியில் மேற்கத்திய வாத்தியக்கருவிகள் சுருதி சேர்ப்பது ரசனை. பேன் பைப்ஸ்'ன் இசையை அதிரடியாய் பயன்படுத்தி இருக்கிறார் ரஹ்மான். தீம் சாங்காக இருக்கலாம். யாருக்குமே கேட்காதவாறு ஒளிந்து கொண்டு குரல் கொடுத்திருக்கிறார் ரஹ்மான். இந்த அதிரடி இசை கீர்த்திசாகத்தியா’வின் குரலுக்கு பெரிதாய் வேலைகொடுக்கவில்லை. கோடு போட்டா : இதோ பென்னி தயாளுக்கு இன்னொரு அதிரடி ஹிட் கிடைத்துவிட்டது. ஹோம் தியேட்டரை அதிர வைக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே ரஹ்மான் விளையாடி இருக்கிறார். தடக் தடக் என்ற ஆர்ப்பாட்டமான தாளக்கட்டில் தாவிகுதித்து விளையாடும்படி அமைக்கப்பட்டிருக்கிறது. "சல்லிக்கட்டில் மாடி கிழிச்சா சரியும் குடலே மாலையடா" என்ற வரிகளில் வைரமுத்துவின் பேனா கூர்வாளாய் மாறி இருக்கிறது. இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என்று பீட்ஸின் ரேஞ்ச், ஹை பிட்சை தொட்டிருக்கிறது. பேஞ்ஜோ கருவியின் வேகத்திற்கு ரஹ்மான் சரி வேலை கொடுத்திருக்கிறார். .பாடலின் ஆக்ரோஷத்தை விக்ரமின் கண்ணில் பார்க்க ஆவலாக இருக்கிறது.காட்டு சிறுக்கி : "காட்டு சிறுக்கி காட்டு சிறுக்கி யார் காட்டு சிறுக்கி" என்று ஒலிப்பது அனுராதா ஸ்ரீராமின் குரலா என்று ஒரு நிமிடம் வியந்துதான் போக வேண்டி இருக்கிறது. கீபோர்ட் நோட்ஸ் வெகு ஷார்ப். “காட்டு சிறுக்கி, நத்தைக்குட்டி” என வைரமுத்துவுக்கே உரிய துள்ளல் தமிழ் வர்ணனைகளும் இதில் உண்டு. "மாயமாய் போவாளோ" என்று சங்கர் மகாதேவன் கொஞ்சுவது அழகு. எலக்ட்ரானிக் ஆர்கன் கிராமத்து ஸ்டைலில் பயணிப்பது புதுசு. ரஹ்மானின் தேடல் அதிசய வைக்கிறது. இராவணின் பாடல்களில் துள்ளாட்டமான டூயட்டிற்கு இந்தப்பாடல் உத்திரவாதம் அளிக்கிறது.கள்வரே : இனிப்புசுவை இல்லாமல் விருந்தா? மெலடி இல்லாத ரஹ்மானின் இசையா? இதோ அதற்கு விடை.. ஸ்ரேயா கோஷலின் குரலில் கஜல் இசையை வெகு இனிமையாய் படைத்திருக்கிறார் ரஹ்மான்."கள்வரே, கள்வரே கண் புகும் கள்வரே" என்று பைந்தமிழில் பரவசப்படுத்தி இருக்கிறார் வைரமுத்து. ஒரு அழகான மாலைப்பொழுதில் ஜன்னலோரம் சாய்ந்தவாறு இயற்கையை ரசித்தபடியே பருகும் தேநீரைப்போல் பரவசமாய் இருக்கிறது இந்தப்பாடல். தலைவனை நோக்கிய தலைவியின் ஏக்கத்தை மிகச்சரியாக இந்தப்பாடல் தனக்குள் பதிவு செய்து இருக்கிறது. "ஸ்ட்ரிங் இன்ஸ்ட்ரூமெண்டல்களை இத்தனை சுகமாக பயன்படுத்த முடியுமா? “வலி மிகும் இடங்கள், வலி மிகா இடங்கள் என தமிழுக்கு தெரிகிறது, அது தங்களுக்கு தெரியுமா?” என்று ஒரு பெண் கேட்பது போல் எழுதி இருக்கும் வைரமுத்துவின் விரல்களுக்கு அழுத்தமாய் கொடுக்கலாம் ஒரு முத்தம். கடா கறி : “கடா கடா கறி அடுப்புல கிடக்கு” என்று பென்னிதயாள், பாக்யராய், A.R.ரஹைனா, தன்விஷா ஆகியோரது குரலில், குழு பாடலாக ஒலிக்கிறது இந்தப்பாடல். டிபிக்கல் மலை வம்சத்தினர் பாடுவது போல ஹார்மோனிகா இசை வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. காடுகள் என்றால் மூங்கிலால் சூழப்பட்டிருப்பதுதானே, மூங்கில் இசைக்கருவிகளின் கோர்வையால் இசையின் பின்னணி பின்னப்பட்டிருக்கிறது. முதல் இரண்டு வரிகளில் இருக்கும் கேட்சிங் ட்யூன் அடுத்தடுத்த வரிகளில் இல்லாதது சற்று ஏமாற்றமே. ராவணன் ஆல்பத்தில் சுமாரான பாடல் இதுவாகத்தான் இருக்கும்.மொத்தத்தில் மணிரத்னம் - ரஹ்மான் காம்பினேஷனில் உருவாகி இருக்கும் ராவணன் இசை, ரசிகர்களுக்கு ஒரு பரவசமான அனுபவத்தையே கொடுக்கிறது. இந்த பாடல்கள் ஒரு வித்தியாசமான கலரை கொடுத்து இருக்கின்றன. புதுப்புது சவுண்ட்ஸ்'க்காக் மெனக்கேட்டிருக்கிறார் ரஹ்மான். ஆனாலும் மணிரத்னத்தின் படங்களில் மிக ஸ்பெஷலாக இருக்கும் ரஹ்மானின் இசை, இந்தப்படத்தின் பாடல்களில் ஸ்பெஷலாக மட்டுமே இருக்கிறது. ஒருவேளை கேட்க கேட்க கிறுக்கு பிடிக்க வைக்கலாமோ என்னவோ? ரஹ்மான் இசை எப்பவும் ஸ்லோ பாய்ஸன் போலத்தானே...

23 மே 2010

ஆபாசப்படம் எடுத்து மிரட்டல்,ஆறுமாதம் வீட்டுக்குள் கிடந்து அழுதேன்!



டி.ராஜேந்தருடன் 'வீராசாமி' படத்தில் நடித்தவர் பத்மா. இப்படத்தில் வில்லியாக வந்தார். பின்னர் பத்து பத்து படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதன்பிறகு பத்மா வாழ்க்கை திசை மாறியது.
ஆபாசபட மிரட்டல் வழக்கில் சிக்கி கோர்ட்டு படியேறினார். தற்போது அதிலிருந்து விடுதலையாகி லஸ்யா என பெயரை மாற்றி மீண்டும் நடிக்க வந்துள்ளார். திரையுலகில் மறுபிரவேசம் பற்றி அவர் கூறுகிறார்.
பணம், பதவி இரண்டும் கொண்ட ஒரு பெரிய மனிதனின் ஆசை வார்த்தையில் மயங்கி அவருடன் பழகினேன். அவரது அன்பை உண்மை என்று நம்பினேன். ஆனால் என் இளமை, அழகு, உடல் சுகத்துக்காகத்தான் அவர் பழகினார் என்ற உண்மை தெரிய அதிர்ந்தேன்.
சினிமாக்காரி என் ஆசைநாயகியாக இருந்து கொள் என்று கேவலமாக பேசியதால் அவரை விட்டு விலகினேன். சில நாட்கள் கழித்து என்னிடம் மன்னிப்பு கேட்டார். அதை நம்பி மீண்டும் அவருடன் பழகினேன். ஒருநாள் என்னை வரவழைத்து நானும் அவரும் பழகிய நாட்களில் நெருக்கமாக இருந்தபோது திருட்டுத்தனமாக எடுத்த சில ஆபாச படங்களை லேப்டாப்பில் போட்டு காண்பித்தார்.
வாழ்நாள் முழுவதும் ஆசைநாயகியாக இருக்க வேண்டும். மறுத்தால் இந்த படங்களை இண்டர்நெட்டில் போடுவேன். உன் மானம் போய்விடும். பெற்றோர் தற்கொலை செய்வார்கள் என்று மிரட்டி பிளாக்மெயில் செய்தார். நான் பயப்படவில்லை. பிறகு டெலிபோனில் மிரட்டினார். அதை செல்போனில் பதிவு செய்தேன். அதுவே அவரை சட்டத்தின் பிடியில் சிக்க வைக்க எனக்கு உதவியது. அவர் என் மீது கூறிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லாததால் வழக்கில் இருந்து விடுதலையானேன்.
இதனால் கடந்த ஆறு மாதமாக மனவேதனையாலும், மனஅழுத்தத்தாலும் வெளி உலகில் தலைகாட்டாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி அழுதேன். இப்போது அதில் இருந்து மீண்டும் விட்டேன்.
தற்போது புழல், மனஉறுதி, ஏழுச்சாமி, 7வது நாள் படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறேன்.

ஒன்பதாம் வகுப்பு மாணவி பொலிசாரால் மீட்பு!

பெரம்பூர் திரு.வி.க. நகரில் ஒரு கும்பல் இளம்பெண்களை ஏமாற்றி கடத்தி வந்து அறையில் அடைத்து ஆபாச படம் எடுப்பதாக போலீசுக்கு புகார் வந்தது. இதற்கு ஆட்டோ டிரைவர் ஒருவர் உடந்தையாக இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து செம்பியம் இன்ஸ்பெக்டர் ரவிகுமரன் திரு.வி.க. நகரில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது போலீசைப் பார்த்ததும் 4 பேர் தப்பி ஓடி விட்டனர். அங்கிருந்த இளம் பெண்ணை போலீசார் மீட்டனர். அவரை வைத்து ஆபாச படம் எடுத்த ஆட்டோ டிரைவர் முரளி என்பவரை போலீசார் கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் இந்த கும்பல் இதுபோல் பல பெண்களை ஆபாச படம் எடுத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. மீட்கப்பட்ட இளம்பெண் 9-ம் வகுப்பு மாணவி ஆவார். தப்பி ஓடிய 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

டுவிட்டரில் த்ரிஷா பெயரில் மோசடி!


இண்டர்நெட்டில் திரிஷா பெயரில் மோசடி நடந்துள்ளது. டுவிட்டர் இணைய தளத்தில் திரிஷா பெயரில் போலியாக யாரோ ஒருவர் முகவரி உருவாக்கி ரசிகர்களுடன் தொடர்பு கொண்டு வந்தார். திரிஷா படங்களும் அதில் போடப்பட்டு இருந்தது.
அதை உண்மை என்று நம்பியவர்கள் கடிதங்கள் அனுப்பி ஏமாந்தனர். இது பற்றி திரிஷாவுக்கு தகவல் தெரிந்ததும் அதிர்ச்சியானார். அவர் கூறியதாவது:
இணைய தளத்தில் எனது பெயரில் மோசடி நடந்திருப்பது கண்டு அதிர்ந்தேன். டுவிட்டரில் திரிஷா டிரேஷர்ஸ் என்ற முகவரியில் என் கணக்கு உள்ளது. போலியாக இன்னொரு முகவரியை யாரோ உருவாக்கி மோசடி செய்துள்ளனர் என்றார். இதுபற்றி போலீசில் புகார் செய்ய திரிஷா தரப்பில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே நயன்தாரா பெயரிலும் இது போன்ற மோசடி நடந்துள்ளது.

22 மே 2010

ரெட்டைச்சுழி,பக்கம் ஒரு பார்வை.



இயக்குனர்களில் சிகரம், இமயமான பாலச்சந்தரும் பாரதிராஜாவும் இணைந்து நடிப்பு வேஷம் கட்டியுள்ள படம். ஒரே கிராமத்தில் எதிர்எதிர் வீட்டில் வசிக்கும் இவர்கள் வெவ்வேறு அரசியல் கொள்கைகளை கடைபிடிப்பதால் பகையாளியாகின்றனர். கூட்டங்களிலும், விழாக்களிலும் மோதிக்கொள்கின்றனர். இந்த சண்டை இரு வீட்டு குழந்தைகளிடமும் பரவுகிறது. அவர்களும் கோஷ்டியாக அடிதடி போடுகிறார்கள்.

குடும்பத்தினரை மிரட்ட ராணுவத்தில் இருக்கும் ஆரியை பாலசந்தர் இல்லத்து குழந்தைகள் கடிதம் போட்டு வர வைக்கின்றனர். ஆரியோ பகையை மறந்து அஞ்சலி பின்னால் சுற்றுகிறார். அவர்கள் காதல் இருவீட்டு குழந்தைகள் மனதை மாற்றுகிறது. நட்பாகிறார்கள். காதல் ஜோடியை சேர்த்து வைக்க போராடுகின்றனர். பாலச்சந்தர், பாரதிராஜா இருவரும் காதலை பிரிப்பதில் பிடிவாதமாக நிற்கின்றனர். அவர்கள் மனதை குழந்தைகள் எவ்வாறு மாற்றி காதலுக்கு சம்மதிக்க வைக்கிறார்கள் என்பது கிளைமாக்ஸ்...

கம்யூனிசம் பேசும் பாரதிராஜா. கதர் சட்டைக்குள் கவுரவம் காட்டும் பாலச்சந்தர் குஸ்திகளை கலகலப்பாக படமாக்கி உள்ளார் இயக்குனர் தாமிரா.

தொண்டர்களை திரட்டி சாலையை மறித்து கூட்டம் நடத்தும் பாரதிராஜாவை துப்பாக்கியால் சுட ஆவேசமாவது... அவரை பாராட்டி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை ஆட்கள் வருகிறார்களா என்று அக்கம் பக்கம் பார்த்தபடியே கிழித்து எறிவது... பெற்றோர், ஆசிரியர் சங்கத்துக்கு தலைவவராக பாரதிராஜா தேர்வாகும்போது குழந்தையே இல்லாத நபர் இந்த பதவிக்கு தகுதியா என கேலி செய்வது... என்று படம் முழுக்க கிழட்டு சிங்கத்தின் கர்ஜனை செய்கிறார் பாலச்சந்தர்.

பாரதிராஜாவும் கத்தி, கம்பு இல்லாமல் வார்த்தைகளால் வன்மம் காட்டுகிறார். பெற்றோர் எதிர்ப்பால் காதலி தூக்கில் தொங்கி சாகும் அவரது பிளாஷ்பேக் காதல் ஜீவன்.

ராணுவ வீரராக வரும் ஆரி குழந்தைகளுக்காக பாரதிராஜா குடும்பத்துடன் போலியாக மோதுவதும் அஞ்சலியை காதலிப்பதுமாய் அழுத்தம் பதிக்கிறார். தாத்தாவுக்கு பயந்து காதலை மூடி மறைக்கும் அஞ்சலி ஒரு கட்டத்தில் காதலை வாய் விட்டுத்தான் சொல்லணுமா! என் கண்ணை பார்த்தால் தெரியலியா? என்று கேட்டு மனதில் வியாபிக்கிறார். ராணுவத்தின ரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக வரும் கருணாஸ் நாங்க நாட்டு மிலிட்டரி என்று மோதுவது சிரிப்பு. என்ன தோழரே என்று பாரதிராஜாவை கலாய்க்கும் சிறுவனும் குஷ்பு பெயரில் யோசனை சொல்லும் சிறுமியும் ஈர்க்கின்றனர்.
பட்டாளத்துக்காரராக வரும் அழகம் பெருமாள், பாலச்சந்தர் மகனாக வரும் ஸ்ரீதர், இளவரசு, மனோபாலா பாத்திரங்களும் வலு சேர்க்கின்றன.
கார்த்திக் ராஜா இசையில் கிராமிய வாசம். செழியன் ஒளிப்பதிவு பலம்.
இரு வயோதிகர்களின் பகைமையை கச்சிதமாக செதுக்கியுள்ளார் இயக்குனர் தாமிரா. திரைக்கதை அழுத்தம் இல்லாததும் காட்சிகள் குழப்பமாய் நகர்வதும் குறை. சிறுவன், சிறுமி “ஐ லவ் யூ” சொல்வதும், முத்தம் கேட்பதும் ஜூனியர் ஆபாசம்.

21 மே 2010

எஸ்.ஜே.சூர்யாவிற்கு செம சாத்து,வாயால் வந்தது வினை!



பவன்கல்யாண்! சிரஞ்சீவியின் தம்பி. ஆந்திராவின் சூப்பர் ஸ்டார். பிராஜா ராஜ்ஜியம் கட்சியின் மிக முக்கிய பொறுப்பிலிருப்பவர்.
அப்படிப்பட்ட புலி, குஷி இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவை பளாரென்று அறைந்ததோடல்லாமல் பலமாக தாக்கியும் இருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன் தலக்கோணத்தில் நடந்த படப்பிடிப்பில்தான் இந்த பலமான தாக்குதல். இதையடுத்து படப்பிடிப்பு நின்று போக, பதைபதைப்பிலிருக்கிறது புலி பட யூனிட்.
குஷி படத்தை தெலுங்கிலும் இயக்கினார் எஸ்.ஜே.சூர்யா. அதில் நடித்தவர்தான் பவன்கல்யாண். அதற்கு முன்புவரை ஃபிளாப் ஹீரோ லிஸ்ட்டில் இருந்த பவன், இந்த படத்திற்கு பிறகுதான் டாப் லெவல் ஹீரோவானார். ஆனால் அப்போதே சூர்யாவின் செய்கைகள் பவனுக்கு பிடிக்காமல்தான் இருந்ததாம். படத்தின் ஹீரோயின் பூமிகா, சூர்யாவுடன் நெருக்கமாக இருந்ததும், படம் ரிலீஸ் நேரத்தில் தனக்கும் அவர் கட்அவுட் வைத்துக் கொண்டதும் பெரும் எரிச்சலை கிளப்பியது பவனுக்கு. இந்நிலையில் தமிழில் நடிகராகிவிட்ட சூர்யா, அடுத்தடுத்து ஹிட்டுகளை கொடுத்து உச்சாணிக் கொம்புக்கு வளர்ந்தார்.
ஆனால் வளர்ந்த வேகத்திலேயே சரியவும் செய்தார். ஆனால் மீண்டும் ஜெயிப்பேன். நான் எடுத்து வருகிற புலி படத்தை தமிழில் எடுக்கும்போது அதில் நான்தான் ஹீரோ என்றெல்லாம் உறுமினார் சூர்யா. இந்த பேட்டியை எந்த பாவியோ மொழி பெயர்த்து ஆந்திராவில் வெளியிட அங்கே கடித்தது அனகோண்டா. 35 கோடி வியாபார கெத் உள்ள தானும், எஸ்.ஜே.சூர்யாவும் ஒன்றா என்ற எரிச்சல் உறுத்திக் கொண்டே இருந்ததாம் பவனுக்கு. 25 கோடியில் இந்த படத்தை எடுத்து முடிப்பதாக சொன்ன டைரக்டர் 35 கோடியை எட்டியும் பிறகும் இன்னும் படத்தை முடிக்கவில்லை. அதற்கு காரணம் ராஜசேகர ரெட்டியின் மரணம், தெலுங்கானா பிரச்சனை இன்னும் பல பல.
இந்த நிலையில் படப்பிடிப்பில் எந்நேரமும் மற்றவர்களிடம் எரிந்து விழுவதும், மறைமுகமாக பவனை நக்கல் அடிப்பதுமாக இருந்தாராம் சூர்யா. எல்லாவற்றுக்குமாக சேர்த்து பல்லை கடித்துக் கொண்டிருந்த பவன், போன வாரம் சூடாகிவிட்டார். பவன் தங்கியிருந்த கேரவேன் அருகில் நின்று கொண்டு எதற்கோ கூச்சலிட்டாராம் சூர்யா. அப்படியே கதவை திறந்து கொண்டு கீழே இறங்கிய பவன், அந்த இடத்திலேயே இவரை போட்டுதாக்க, கீழே மயங்கி விழுந்துவிட்டாராம் சூர்யா. அந்த பவன் பிளாக் பெல்ட் ஆசாமியும் கூட.
மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தார்களாம் சூர்யாவுக்கு. இதையடுத்து படப்பிடிப்பு நகராமல் நிற்கிறது. இன்னும் ஒரு வாரம் படப்பிடிப்பு நடந்தால் படமே முடிந்திருக்கும். இந்த நேரத்தில் இப்படி ஒரு கெரகமா? ஆடிப்போயிருக்கிறார் தயாரிப்பாளர்.

16 மே 2010

வேற்றுக்கிரகத்தில் மனிதர்கள் இருப்பது உறுதி!



'ஏலியன்ஸ்' என்றழைக்கப்படும் வேற்றுக்கிரகவாசிகள் இருப்பது உறுதி; ஆனால் அவர் களை, மனிதர்கள் தொடர்பு கொள்ள முயற்சிக்கக் கூடாது' என, பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறியுள்ளார்.
ஸ்டீபன் ஹாக்கிங் கூறியதாவது:
பிரபஞ்சத்தில், 10 ஆயிரம் கோடி நட்சத்திர மண்டலங்கள் உள்ளன. ஒவ்வொரு நட்சத்திர மண்டலத்திலும் லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன. இவற்றில், பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழ்கின்றன என்று கூறுவது தவறு.
என்னுடைய கணித அறிவின்படி, வேற்று கிரகவாசிகள் உள்ளனர் என்பது தெரிகிறது. அவர்கள் எந்த உருவத்தில் உள்ளனர் என்பதைக் கண்டறிவது தான் சவாலான விஷயம். அவர்கள் நுண்ணுயிரிகளாகவும் இருக்கலாம். புழுவாகவும் இருக்கலாம். அவற்றிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்த உருவங்களாகவும் இருக்கலாம். அவர்களுடைய வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதற்கு, நம் உயிரினத்தின் வளர்ச்சியை உதாரணமாகக் கொள்ளலாம்.
தங்கள் கிரகத்திலுள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்தி விட்டு, தற்போது வேறு இடத் தில் வசிப்பதாக நான் கருதுகிறேன். அது போன்ற வேற்று கிரகவாசிகள், மற்ற கிரகங்களுக்கு நாடோடிகள் போல நுழைந்து, அவ்வுலகத்தைக் கைப்பற்றவும் தயாராக இருக்கலாம். ஆனால், அவர்கள் இவ்வுலகில் நுழைந்தால், அவர்களுக்கு அது வெற்றியாக அமைய வாய்ப் பில்லை. இவ்வாறு ஸ்டீபன் ஹாக்கிங் கூறினார்.

14 மே 2010

தமன்னாவை எனக்கு ரொம்பவே பிடிக்கும்,-த்ரிஷா.



தமிழ் சினிமா நடிகைகளில் முன்னுக்கு நிற்கும் தமன்னாவைப் பற்றி “தமன்னாவை எனக்கு ரோம்பவே பிடிக்கும். எனக்கு மட்டுமில்லை எல்லாருக்குமே தமன்னாவை ரொம்பப் பிடிக்கும்…
(அப்படியா…!) எல்லோரையும் கவர்கிற மாதிரி அவர்கிட்ட ஏதோ ஒரு சிறப்பு இருக்கிறதுதானே… நல்ல நல்ல படங்களில்.. பெரிய ஹீரோகளுடன் இனைந்து நடிக்கிறாங்க…ஷீட்டிங் ஸ்பாட்ல ரொம்பவே சின்சியரா இருப்பாங்களாம்.
இதுவே மிகப்பெரிய ப்ளாஸ் தான்…’ என்கிறார் த்ரிஷா.
ஒரு நடிகை இன்னொரு நடிகையை புகழ்ந்து பேசுறாரே… அடடே ஆச்சரியம் தான்.

10 மே 2010

மதுபோதையில் கார் செலுத்திய நடிகர் கைது.



குடிபோதையில் தாறுமாறாக கார் ஓட்டிய நடிகரை போலீசார் வாகன சோதனையின்போது மடக்கினர். ஆனால், அவர் நிற்காமல் பறந்ததால், அவரை போலீசார் விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர். சினிமாவில் வருவது போன்ற சம்பவத்தில் ஒரு சினிமா நடிகரே சிக்கிய இந்த ருசிகர நிகழ்ச்சி பற்றிய விவரம் வருமாறு:- தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் பி.நவ்தீப். தமிழில் திருவாசகம் என்ற சினிமாவிலும், பெயரிடப்படாத ஒரு சினிமாவிலும் நடித்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் இவர் ஒரு காரில் மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருந்தார். அந்த காரில் அவரது நண்பர்கள் சிலரும் இருந்தனர். பஞ்சார ஹில்ஸ் பகுதியில் போலீசார் அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். ஒரு கார் மின்னல் வேகத்தில் தாறுமாறாக வருவதைக் கண்ட போலீசார் அந்த காரை தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். ஆனால் கார் நிற்காமல் காற்றை கிழித்துக் கொண்டு பறந்தது. ஆனாலும் போலீசார் விடாமல் அந்த காரை துரத்தினர். சிறிது தூரத்தில் அந்த காரின் முன்னால் போலீசார் தங்களது வாகனத்தை குறுக்காக நிறுத்தி மடக்கி பிடித்தனர். காரில் இருந்தவர்களை கீழே இறக்கி சோதனை போட்டனர். அப்போது அவர்கள் அனைவரும் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. நடிகர் நவ்தீப்பும் குடிபோதையில் இருந்தார். அவர்தான் காரை ஓட்டி வந்ததும் தெரிய வந்தது. அனைவரையும் கைது செய்வதாக கூறி போலீசார் ஒரு ஆட்டோவில் ஏற்றினர். ஆனால், நடிகர் நவ்தீப் ஆட்டோவில் ஏற மறுத்து போலீசாருடன் தகராறில் ஈடுபட்டார். பின்னர் ஒரு வழியாக அவரையும், அவரது நண்பர்களையும் போலீசார் கைது செய்தனர். அனைவரும் பஞ்சார ஹில்ஸ் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். நடிகர் நவ்தீப் மீது குடி போதையில் கார் ஓட்டியது, அரசு ஊழியர்களை (போலீசாரை) தங்களது கடமையை செய்ய விடாமல் தடுத்தது, அரசு ஊழியர்களை (போலீசாரை) தாக்கி காயம் உண்டாக்கியது ஆகிய 3 குற்றச்சாட்டுகளின் பேரில், இந்திய தண்டனை சட்டத்தின் (ஐ.பி.சி.) 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.

09 மே 2010

பெண் சிங்கம் படத்திற்காக வாலி எழுதிய பாடல்.



முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதி கதை-வசனத்தில் வளர்ந்து வரும் படம், `பெண் சிங்கம்.' இந்த படத்தில், உதயகிரண்-மீராஜாஸ்மின் கதாநாயகன்-கதாநாயகியாக நடிக்கிறார்கள்.

படத்தில் லட்சுமிராயும், ராகவா லாரன்சும் இணைந்து நடனம் ஆடும் ஒரு பாடல் காட்சி இடம்பெறுகிறது. அந்த பாடலை கவிஞர் வாலி எழுதியிருக்கிறார். ``அடி, ஆடி அசையும் இடுப்பு-சோறு ஆக்கி வைக்கும் அடுப்பு...அட, ஏண்டி அதுக்கு உடுப்பு?-அதை எடுக்க சொல்லு விடுப்பு...'' என்று தொடங்கும் அந்த பாடலுக்கு, தேவா இசையமைத்து இருக்கிறார்.

இந்த பாடல் காட்சிக்காக, சென்னையை அடுத்த திருமழிசையில் உள்ள ஒரு பெரிய குடோனில் மூன்று பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டன. அதில் லட்சுமிராயும், ராகவா லாரன்சும் ஆடிப்பாடுவது போல் 4 நாட்கள் அந்த பாடல் காட்சியை படமாக்கினார்கள்.

`பெண் சிங்கம்' படத்தில் வேலு நாச்சியாரின் ஓரங்க நாடகமும் இடம்பெறுகிறது. வேலுநாச்சியாராக மீராஜாஸ்மின் நடித்த காட்சி, தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உள்ள கலையரங்கில் படமாக்கப்பட்டது.

கொழுந்து விட்டு எரிகின்ற நெருப்பு வளையத்தில் உதயகிரணும், ராதாரவியும் மோதுகிற சண்டை காட்சி ஒன்றும் சமீபத்தில் படமானது.

இந்த படத்துக்காக கலைஞர் கருணாநிதி எழுதிய ``ஆகா! வீணையில் எழுவது வேணுகானமா? திருவாவடுதுறையின் தோடி ராகமா? திருவெண்காட்டு மகுடி நாதமா?'' என்ற பாடலும், கவிஞர் வைரமுத்து எழுதிய ``நீ சொன்னால் தேய் பிறை வளரும்...நீ தொட்டால் தீப்பொறி மலரும்'' என்ற பாடலும் சுவிட்சர்லாந்தில் படமாக்கப்படுகின்றன. அத்துடன், `பெண் சிங்கம்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைகிறது.

ஜெ. நந்தினி ஆர்ட்ஸ் சார்பில் என்.ஜெயமுருகன், ஆறுமுகநேரி எஸ்.பி.முருகேசன் ஆகிய இருவரின் தயாரிப்பில் வளர்ந்து வரும் இந்த படத்தில் விவேக், ரிதீஷ் எம்.பி, சுதர்சனாசென், ரம்பா, ரோகிணி, வாகை சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன், நிழல்கள் ரவி, மதன்பாப், ஓ.ஏ.கே.சுந்தர் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

பி.சி.ஸ்ரீராமின் உதவியாளர் விஜய் ராகவ் ஒளிப்பதிவு செய்கிறார். திரைப்பட கல்லூரி மாணவரும், பார்த்திபனிடம் இணை இயக்குனராக பணியாற்றியவருமான பாலி ஸ்ரீரங்கம் இந்த படத்தை டைரக்டு செய்கிறார்.

பாணா காத்தாடி.



மூன்றாம் பிறை, கிழக்குவாசல், இதயம், பார்த்திபன் கனவு, எம்மகன், ஜெயங்கொண்டான் ஆகிய படங்களை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தயாரித்தவர், டி.ஜி.தியாகராஜன். இவர் வழங்கும் புதிய படம், `பாணா காத்தாடி.'

சென்னையின் ஒரு மூலையில், காத்தாடி விடுவதையே சுவாசமாக கொண்ட ஒரு இளைஞனின் வாழ்க்கைப்பதிவு இது. முழுக்க முழுக்க நிஜ மனிதர்களை வைத்து, எதார்த்தம் தவறாமல், இந்த படத்தை உருவாக்கி வருகிறார்கள்.

அடித்தட்டு மக்கள் என்றாலே அழுக்கானவர்கள், அழுதுகொண்டே இருப்பவர்கள் என்ற நம்பிக்கையை மாற்றி, அவர்களின் வாழ்க்கையில் உள்ள சுவாரஸ்யம், ஆனந்தம், அன்பு ஆகியவற்றை இந்த படத்தில் பதிவு செய்து வருகிறார்கள். 90 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்தது.

சர்வதேச அளவில், குஜராத்தில் நடைபெற்ற பட்டம் விடும் போட்டி, இந்த படத்துக்காக சமீபத்தில் படமாக்கப்பட்டது.

`பாணா காத்தாடி' படத்தில், நடிகர் முரளியின் மகன் அதர்வா கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். பிரசன்னா, கருணாஸ் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கே.வி.ஆனந்திடம் இணை ஒளிப்பதிவாளராக இருந்த ரிச்சர்ட் எம்.நாதன், இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். திரைப்பட கல்லூரி மாணவரும், `விடியலை நோக்கி' குறும் படத்துக்காக தேசிய விருது பெற்றவருமான பத்ரி வெங்கடேஷ், இந்த படத்தின் திரைக்கதை அமைத்து டைரக்டு செய்கிறார்.

செந்தில் தியாகராஜன், டி.அர்ஜுன் ஆகிய இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார்கள்.

நான் சிவனாகிறேன்!


தவறு செய்பவர்களுக்கு கொடுக்கின்ற தண்டனைகள் தப்பு கணக்குகளில் சேராது. தவறு செய்பவர்களை தண்டிப்பவர்கள் எல்லோரும் சாமிதான் என்ற கருவை அடிப்படையாக வைத்து, ஒரு படம் தயாராகிறது. இந்த படத்துக்கு, `நான் சிவனாகிறேன்' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

படத்தின் கதாநாயகன் தன்னை சிவனாக எண்ணிக்கொண்டு தவறு செய்பவர்களை தண்டிப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. கதா நாயகனாக உதய் கார்த்திக் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக வர்ஷா நடிக்கிறார். இவர்களுடன் ஆதித்யா, பிரேம்குமார், சுகுமார், `காதல்' கண்ணன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்கிறார், வி.கே.ஞானசேகர். கே.கோகுல் ஒளிப்பதிவு செய்ய, கே.எஸ்.மனோஜ் இசையமைக்கிறார். நா.முத்துக்குமார், கே.நிஷாந்த், வி.கே.ஞானசேகர் ஆகிய மூவரும் பாடல்களை எழுதுகிறார்கள். எம்.என்.கிரியேஷன்ஸ் சார்பில் சி.கே.தயாரித்து வருகிறார்.

படப்பிடிப்பு சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறுகிறது.

தம்பி அர்ஜுனா,படப்பிடிப்பால் பீதியில் மக்கள் ஓட்டம்!



ஏஞ்சல் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஜி.எம்.பாலாஜி தயாரித்து வரும் படம், தம்பி அர்ஜூனா. இந்த படத்தில், அர்ஜூனா என்ற கதாபாத்திரத்தில் ரமணா நடிக்க, அவரது அண்ணன் தர்மன் என்ற கதாபாத்திரத்தில் பெரோஸ்கான் நடிக்கிறார். இவர், சரித்திரம் என்ற மலையாள படத்தில் நடித்தவர்.

போலீஸ் அதிகாரியாக, வில்லன் வேடத்தில் சுமன் நடிக்கிறார். இன்னொரு வில்லனாக பிரான்சை சேர்ந்த தினேஷ் நடிக்கிறார். கதாநாயகிகளாக ஆஷிமா, ஷர்மிளா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் கஞ்சா கருப்பு, `நான் கடவுள்' ராஜேந்திரன், சிங்கமுத்து, பாலாசிங் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இசையமைப்பாளர் தினா முதன்முதலாக இந்த படத்தில் நடிகராக முகம் காட்டுகிறார்.

`தம்பி அர்ஜூனா' படத்துக்காக ஒரு பரபரப்பான `என்கவுன்டர்' காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. இந்த காட்சியை படமாக்கியபோது, உண்மையிலேயே `என்கவுன்டர்' நடக்கிறதோ என பதற்றப்பட்டு, பொதுமக்கள் ஓட்டம் பிடித்தார்கள்.

சுமனுடன், ரமணாவும், பெரோஸ்கானும் மோதும் உச்சக்கட்ட சண்டை காட்சி, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது. சண்டை காட்சியின் முடிவில், அந்த அரங்குகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டன.

வேகமாக வளர்ந்து வரும் இந்த படத்தின் கதை-திரைக்கதை எழுதி டைரக்டராக அறிமுகம் ஆகிறார், விஜய் ஆர்.ஆனந்த்.

கார்த்திக்கு பெண் தேடுகிறார் தந்தை சிவகுமார்.


நடிகர் கார்த்தியின் நண்பர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் என ஆளாளுக்கு கார்த்தி-தமன்னா கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆயிடுச்சி என கொளுத்திப் போட, கவலையில் இருக்கிறார் நடிகர் சிவகுமார். பிள்ளைகள் சும்மா இருந்தாலும் எழுதவெச்சே... சேர்த்து வெச்சுடுவாங்க என நினைத்தவர் கார்த்திக்கு திருமணம் செய்ய முடிவெடுத்துவிட்டார். சூர்யா காதலித்து திருமணம் செய்து கொண்டதுபோல் கார்த்தியும் காதல் வலையில் வீழ்ந்துவிடக் கூடாது என்பதால்... கோவையில் தனது சொந்தங்களில் பெண் தேடி வருகிறார். அதிலும் தனது அந்தஸ்துக்கு ஏற்ற மாதிரியான பெண்ணாகவும் பார்க்கிறார். அதனால் அடிக்கடி கோவை சென்று வரும் சிவகுமார், நகைக் கடை அதிபர் மகள், அரசியல்¨ புள்ளியின் மகள் என சில சம்பந்தங்கள் வந்திருப்பதாகக் கூறுகிறார். சீக்கிரம் கல்யாண விருந்து வைங்க சார்.

07 மே 2010

கிடைக்கிற வாய்ப்பை கெடுக்கிற பாவனா.


கிடைக்கிற வாய்ப்பையெல்லாம் கெடுக்கிற மாதிரியே முன்னாடி வந்து நிக்குது முசுடுத்தனம், என்ன பண்ணுறது... அது அவரோட சுபாவம் என்று மூக்கை துடைத்துக் கொள்கிறார் மேனேஜர். யாருடைய மேனேஜர்? எதுக்காக இந்த அழுகை? வேறொன்றுமில்லை, அலைந்து திரிந்து ஒரு வாய்ப்பை கொண்டு வந்தாராம் பாவனாவின் மேனேஜர். அதில் கேரக்டர் சின்னது என்று முகத்தை சுளித்துக் கொண்டாராம் பாவனா. இதுதான் பிரச்சனை.
பிரபுதேவா இயக்கும் க்ளின் இச் என்ற படத்தில் நடிக்கதான் பாவனாவை 'தள்ளிவிட்டார்' மேனேஜர். முதலில் சந்தோஷமாக தலையாட்டிய பாவ்ஸ், படத்தில் தன்னுடைய கேரக்டர் மூன்றாவது நாயகி என்றதும் அப்செட். இதுக்கா என்னை வரச்சொன்னீங்க என்று கோபித்துக் கொண்டு கேரளா போய்விட்டாராம்.
படம் கிடைக்கறதே பாலைவன சோலையா இருக்கு. இதில் பழம் பழுக்கலையேன்னா நான் என்ன பண்றது? இதுதான் மேனேஜரோட புலம்பலாம்!

நயன்தாராவின் தவிப்பு!


கொழுப்பை ஊசி வழியே உறிஞ்சி எடுக்கும் முறையில் தனது எடையை குறைத்த நயன்தாரா, முகத்திலிருந்து மிஸ்ஸான அந்த அழகு சதையை மீண்டும் கொண்டுவர தவிக்கிறார். மட்டனை *வெட்டினாலும்*, வருவேனா என்கிறது சதை!

சைவத்திற்கு மாறிய ஸ்ரேயா.


மீன் போன்ற உடல்வாகுடன் இருந்தாலும் அசைவத்திலிருந்து முழு சைவத்திற்கு மாறிவிட்டார் ஸ்ரேயா. எல்லாம் ஜக்கி ஆசிரமத்திற்கு போய் வந்ததிலிருந்துதான். உயிர்கள் பாவம். அதை உண்பது அதைவிட பாவம் என்கிறார் ஸ்ரே.

05 மே 2010

பட்டதாரி பெண்ணுக்கு நடந்தது என்ன?

சென்னையில் கொம்புயுட்டர் நிறுவனத்தில் வேலைபார்த்த பட்டதாரி பெண் மயக்க ஊசி போட்டு மர்ம நபர்களால் காரில் கடத்தி செல்லப்பட்டு கற்பழிக்கப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த பட்டதாரி இளம்பெண், `தனக்கு அதுபோல் எதுவும் நடக்கவில்லை என்று கூறுவதுடன் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள மறுத்தும் ஆஸ்பத்திரியில் போராட்டம் நடத்தி வருகிறார்'. கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவிலை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி பெயர் ராணி. இவர்களது மூத்தமகள் ஸ்ரீகுமாரி (24 வயதான இவரது பெயர் மாற்றப்பட்டுள்ளது). பி.எஸ்சி. கம்ப்ïட்டர் சயின்ஸ் பட்டப்படிப்பு படித்துள்ள இவர், சென்னை தரமணி டைட்டல் பார்க்கில் உள்ள கம்ப்ïட்டர் நிறுவனம் (கால்சென்டர்) ஒன்றில் மாதம் ரூ.40 ஆயிரம் சம்பளத்தில் கடந்த ஒரு மாதமாக வேலை பார்த்து வந்தார். சென்னை சைதாப்பேட்டை சி.ஐ.டி.நகரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார். இவரது தந்தை ராஜேந்திரன் ஆம்னி பஸ் டிரைவராக உள்ளார். இவரது தங்கை கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். ஸ்ரீகுமாரி தான் வேலை பார்க்கும் நிறுவனம் தன்னை கனடா நாட்டுக்கு பயிற்சிக்கு அனுப்பப் போவதாகவும், தான் உடனடியாக கனடா செல்ல இருப்பதாகவும் தனது பெற்றோரிடம் கூறினார். மகள் கனடா செல்கிறாள், அவளை வழியனுப்பி வைப்போம் என்று ஸ்ரீகுமாரியின் பெற்றோர் கடந்த சனிக்கிழமை அன்று சென்னை வந்தனர். ஸ்ரீகுமாரியும் கனடா செல்வது விஷயமாக தான் வேலைபார்க்கும் கம்பெனிக்கு போய் பார்த்துவிட்டு வருவதாக சனிக்கிழமை அன்று காலையில் சென்றார். போனவர் மாலை 5 மணி ஆகியும் திரும்பிவரவில்லை. பயந்துபோன அவரது தந்தை கம்ப்ïட்டர் நிறுவனத்திற்கு போய் தனது மகளை எங்கே என்று கேட்டார். அதற்கு அந்த கம்ப்ïட்டர் நிறுவனத்தினர் சரியாக பதில் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது. ஸ்ரீகுமாரியின் செல்போனில் தொடர்பு கொண்டபோதும் பேச முடியவில்லை. செல்போன் `சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. மகளுக்கு என்ன கதி ஆனதோ என்று ஸ்ரீகுமாரியின் பெற்றோர்கள் பயந்தனர். இந்த நிலையில் இரவு 9 மணி அளவில் ஸ்ரீகுமாரியோடு செல்போனில் பேச முடிந்தது. அப்போது அவர், தியாகராயநகர் சி.ஐ.டி. காலனியில் ஒரு வங்கி ஏ.டி.எம். மையம் அருகே அரைகுறை மயக்கத்தில் இருப்பதாகவும், உடனடியாக வந்து என்னை அழைத்து செல்லுங்கள் என்றும் ஸ்ரீகுமாரி கூறினார். உடனே ஸ்ரீகுமாரியின் பெற்றோர் சி.ஐ.டி. காலனி சென்றனர். அங்கு வங்கி ஒன்றின் ஏ.டி.எம். மையம் அருகே ஸ்ரீகுமாரி உட்கார்ந்திருந்தார். அவரை சுற்றி பொதுமக்கள் சிலரும் நின்றிருந்தனர். ஸ்ரீகுமாரி மயக்கம் அடைந்து ரோட்டு ஓரம் கிடந்ததாகவும், முகத்தில் தண்ணீர் தெளித்து உட்கார வைத்துள்ளோம் என்றும் பொதுமக்கள் கூறினார்கள். தான் வேலைபார்த்த கம்ப்ïட்டர் நிறுவனத்துக்கு சென்ற ஸ்ரீகுமாரிக்கு என்ன நடந்தது, அவர் ஏன் மயக்கமடைந்த நிலையில் ரோட்டு ஓரம் கிடந்தார் என்பது போன்ற திகிலான கேள்விகள் ஸ்ரீகுமாரியின் பெற்றோர் மனதில் எழுந்தது. இதுபற்றி ஸ்ரீகுமாரியிடம் கேட்டபோது, `அவர் விவரமாக எதுவும் சொல்லாமல், எனக்கு உடல் முழுவதும் வலிக்கிறது. ஏதாவது ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேருங்கள்' என்று மட்டும் தெரிவித்தார். உடனடியாக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஸ்ரீகுமாரியை சிகிச்சைக்கு சேர்த்தனர். இந்த நிலையில், தனது மகளுக்கு நேர்ந்த கொடுமை பற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி ஸ்ரீகுமாரியின் தந்தை வேளச்சேரி போலீசில் புகார் கொடுத்தார். போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில், இணை கமிஷனர் சக்திவேலு, துணை கமிஷனர் செந்தாமரை கண்ணன் ஆகியோர் மேற்பார்வையில், கிண்டி உதவி கமிஷனர் செந்தில்குமரன், வேளச்சேரி இன்ஸ்பெக்டர் தென்னரசு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தான் வேலைபார்த்த கம்ப்ïட்டர் நிறுவனத்துக்கு சென்ற ஸ்ரீகுமாரியை யாரோ மர்ம நபர்கள் கடத்தி சென்று கற்பழித்திருக்கலாம் என்று முதலில் சந்தேகம் எழுந்தது. இதுபற்றி ஸ்ரீகுமாரியிடம் போலீசார் துருவி, துருவி விசாரித்தபோது, அவர் ஒரு திடுக்கிடும் தகவலை சொன்னார். அவர் கூறியதாவது:- எங்கள் கம்பெனியில் வேலைபார்க்கும் 4 திறமையான ஊழியர்களை கனடா நாட்டுக்கு விசேஷ பயிற்சிக்கு அனுப்புவதற்கு கம்பெனி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு ஒரு தேர்வு நடத்த வேண்டும் என்று என்னை கம்பெனி அதிகாரிகள் 2 ஆண்களும், 2 பெண்களும் 4 பேர் காரில் அழைத்து சென்றனர். போகும் வழியில் என்னிடம் வெள்ளை பேப்பரில் கையெழுத்து போடும்படி கூறினார்கள். நான் கையெழுத்து போட மறுத்தேன். இதனால் என்னுடன் வந்த பெண் அதிகாரி ஒருவர் எனக்கு மயக்க ஊசி போட்டுவிட்டார். உடனே நான் மயங்கி விட்டேன். அதன்பிறகு என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. தியாகராயநகரில் ரோட்டு ஓரம் என்னை தூக்கி போட்டுவிட்டனர். பொதுமக்கள் எனது முகத்தில் தண்ணீர் தெளித்த பிறகுதான் எனக்கு மயக்கம் தெளிந்தது. இவ்வாறு ஸ்ரீகுமாரி போலீசாரிடம் கூறினார். ஸ்ரீகுமாரி இருந்த நிலையை பார்த்து அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் முதலில் கருதினார்கள். இதனால் அவரை நேற்று முன்தினம் இரவு சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு ஸ்ரீகுமாரிக்கு மருத்துவ பரிசோதனை செய்ய டாக்டர்கள் முற்பட்டனர். ஆனால் மருத்துவ பரிசோதனைக்கு ஸ்ரீகுமாரி கடுமையாக மறுத்துவிட்டார். டாக்டர்கள் எவ்வளவோ எடுத்து சொல்லியும், நான் கற்பழிக்கப்படவில்லை என்றும், எனக்கு மருத்துவ பரிசோதனை அவசியமில்லை என்றும் ஸ்ரீகுமாரி கோபமாக கூறி வருகிறார். ஆனால் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய டாக்டர்கள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டுள்ளனர். உயர் போலீஸ் அதிகாரிகளும், ஸ்ரீகுமாரியை சமாதானப்படுத்தி வருகிறார்கள். இந்த வழக்கு தொடர்பாக நேற்று இரவு உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- இந்த வழக்கை பொறுத்தமட்டில், இளம் பெண் ஸ்ரீகுமாரியும், அவரது பெற்றோரும் முரணான தகவல்களை சொல்லுகிறார்கள். ஸ்ரீகுமாரி தரமணி டைட்டல் பார்க்கில் கால் சென்டரில் மாதம் ரூ.40 ஆயிரம் சம்பளத்தில் வேலை பார்ப்பதாக பெற்றோர் தெரிவித்தனர். ஆனால் அந்த குறிப்பிட்ட கம்பெனியில் போய் விசாரித்தபோது, ஸ்ரீகுமாரி எங்கள் கம்பெனியில் வேலை பார்க்கவே இல்லை என்று கூறிவிட்டனர். எங்கள் கம்பெனியில் யாருக்கும் மாதம் ரூ.40 ஆயிரம் சம்பளம் தரப்படவில்லை என்றும் சொல்லுகிறார்கள். ஸ்ரீகுமாரியிடம் பல மர்மங்கள் உள்ளன. அவர் போதை பொருளுக்கு அடிமையாகி தவறான நபர்களுடன் தொடர்பு வைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். அந்த கும்பலின் ஏமாற்று வலையில் அவர் சிக்கியிருக்கலாம். அந்த கும்பல் சொன்ன தகவல் அடிப்படையில் கனடாவுக்கு செல்வதாக சொல்லி தனது பெற்றோரை வரவழைத்திருக்கலாம். இதற்கெல்லாம் ஸ்ரீகுமாரிதான் சரியான விடையைச் சொல்ல வேண்டும். அவர், பெற்றோரிடம் மாதம் ரூ.40 ஆயிரம் சம்பளத்தில் வேலைபார்ப்பதாக சொல்லி கூட ஏமாற்றியிருக்கலாம். அவர் மயக்கமடைந்து தியாகராயநகரில் ரோட்டு ஓரம் கிடந்தது எப்படி? என்பதும் புரியாத புதிராக உள்ளது. அதற்கு அவர் சொல்லும் கதையும் நம்பும்படியாக இல்லை. விரைவில் இந்த வழக்கில் என்ன நடந்தது என்பது பற்றிய உண்மையை கண்டுபிடித்து விடுவோம். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

02 மே 2010

நடிகை மனோரமா கார் விபத்தில் காயம்.


திருமலையில் வேண்டுதலை முடித்துக் கொண்டு திரும்பிய நடிகை மனோரமாவின் கார் வழியில் கவிழ்ந்தது. இதில் மனோரமா காயமடைந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.நடிகை மனோரமா நேற்று முன்தினம் திருப்பதி சென்றார். ஏழுமலையானை பயபக்தியுடன் தரிசனம் செய்தார். வேண்டுதல் நிறைவேற மொட்டை போட்டார். பின்னர் தனது தங்க நகைகளை காணிக்கையாக கோவில் உண்டியலில் போட்டார்.அதே நேரம், திருமலை தேவஸ்தான அதிகாரிகள் தனக்கு சிறப்பு விருந்தினர் மாளிகை ஒதுக்கவில்லை என்ற கோபத்தில் நடைபாதையில் அமர்ந்து தர்ணா செய்தார். 1000 படங்களில் நடித்த, சிறந்த நடிகை விருது வாங்கிய தனக்கு அந்த தகுதி இல்லையா என்று அவர் நிருபர்களிடம் கூறினார். தரிசனம் முடிந்தபிறகு நேற்று அதிகாலையில் காரில் சென்னை திரும்பினார்.தமிழக எல்லையில் உள்ள கீர்த்தளம் என்ற இடத்தில் கார் வந்து கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை முந்தி செல்வதற்காக டிரைவர் காரை திருப்பினார்.அப்போது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி ரோட்டில் கவிழ்ந்தது. இதில் நடிகை மனோரமாவும் அவருடன் வந்தவர்களும் காருக்குள் சிக்கிக் கொண்டனர். கிராம மக்கள் விரைந்து வந்து காருக்குள் இருந்தவர்களை மீட்டனர். இந்த விபத்தில் மனோரமா காயம் அடைந்தார். அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றார். பின்னர் சென்னை மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.

01 மே 2010

சுறா,திரை நோக்கு.




மீனவ கிராமத்தில் வசித்துவரும் விஜய்க்கு, தன் பகுதியில் உள்ள மக்கள் அனைவருக்கும் நல்ல வீடு கட்டித்தர வேண்டும் என்பது லட்சியம். ஆனால் வழக்கம் போல் வில்லன் விஜய்யின் இந்த ஆசைக்கு குறுக்காக வருகிறான். அந்த மீனவ கிராமத்தில் இருக்கும் மக்களை வெளியேற்றிவிட்டு, அந்த இடத்தை அபகரித்து கொள்ள திட்டம் போடுகிறான். பின் சுறாவான விஜய் எப்படி வில்லனை வேட்டையாடி
தன் பகுதி மக்களுக்கு வீடு கட்டித்தருகிறார் என்பது மீதிக்கதை. எத்தனையோ படங்களில் நாம் பார்த்து சலித்த கதைதான் என்றாலும், அதை விஜய்கேற்ற விதத்தில் கமர்ஷியல் மசாலா தூவி புதுப்படையலாக தந்திருக்கிறார் இயக்குனர். கடலுக்கு சென்ற மீனவர்களில் எல்லோரும் வந்துவிட, சுறா மட்டும் வரவில்லை என அனைவரும் தவித்துக்கொண்டிருக்க, அட்டகாசமாக கடலுக்குள் இருந்து விஜய் தோன்றும் ஆரம்பக்காட்சியில் கொளுத்தப்படும் 'சரவெடி திரைக்கதை' கடைசிவரை வெடித்துகொண்டே இருக்கிறது, சில இடங்களில் ஆயிரம் வாலா போலவும், சில இடங்களில் புஸ் எனவும்...

ஓப்பனிங் குத்துப்பாடல், அதிரடி ஐந்து சண்டைக்காட்சிகள், பரபரப்பான பஞ்ச் டையலாக்குகள், ஸ்டையிலான நடனங்கள், பிரம்மாண்டமான பாடல் அரங்குகள், என வழக்கமான விஜய் படத்தில் என்னென்ன இருக்குமோ அது அத்தனையும் படத்தில் இருக்கிறது.ஆனால் கொஞ்சம் சுவாரஸ்யத்தோடு...குப்பத்து மக்கள் விஜயைப்பார்த்து பேசும் டயலாக்குகள், விஜய் ஸ்கீரினை பார்த்து பேசும் வசனங்கள் என அத்தனையிலும் விஜயின் அரசியல் ஆசை தெளிவாய் தெரிகிறது. விஜய் பேசும் பஞ்ச் டயலாக்குகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு ரூபாய் கொடுத்தால் போதும்,இயக்குனர் இந்த ஒரே படத்தில் லட்சாதிபதி ஆகிவிடுவார்.

இடைவேளையின் போது விஜய் தப்பிப்பதாக காட்டப்படும் காட்சியில் காதில் பூ சுற்றுவார்களோ என நினைத்தால், உண்மையிலேயே அந்தக்காட்சி நம்பும்படி அமைக்கப்பட்டிருப்பது டைரக்டர் டச். மற்றபடி தனி ஆளாக விஜய் நூறு கோடி ரூபாய் சரக்கை கடத்தி சென்று பாம்பேயில் விற்று வருவது, பின் அதனைத்தொடரும் காட்சிகள் எல்லாம் காதில் பூ அல்ல.. பூக்கடை வைத்திருக்கிறார்கள். லாஜிக் எல்லாம் பார்க்காதீர்கள் என்று முடிந்த அளவு மேஜிக் காட்டி அனுப்புகிறார்கள்.

விஜய் என்ற ஒற்றை மனிதன் இவ்வளவு பெரிய சுறாவை தன் தோளில் தூக்கி சுமந்திருக்கிறார். டயலாக் டெலிவரியிலும், நடன அசைவுகளிலும், சண்டை காட்சிகளிலும் விஜய் பின்னி பெடலெடுகிறார். குறிப்பாய் தன் மக்களிடம் வீடு எரிந்து போனவுடன் பேசும் காட்சியில் விஜய் அசத்துகிறார். கண் தெரியாத தம்பதிகளிடம் விஜய் பேனா வாங்க்கும் காட்சியும் டச்சிங். விஜய் தன் ரசிகர்களுக்கு "சுறா" விருந்து படைத்திருக்கிறார்.ஆனாலும் இது எத்தனை நாளைக்கு? விஜய் நீங்க கண்டிப்பா அடுத்த கட்டத்துக்கு போயே ஆகணும்.

வெறும் வெள்ளைப்பதுமையாக தமன்னா.. வழக்கமான தமிழ்சினிமா கதாநாயகி என்னவெல்லாம் செய்வாறோ அதையெல்லாம் செய்கிறார். இரண்டு சந்திப்புகளிலேயே விஜய் மீது காதல் கொள்வது, அவ்வப்போது ரொமான்ஸ் என தமன்னாவிற்கு பெரிதாய் வேலையில்லை. சமீபகாலத்தில் தமன்னா இவ்வளவு மோசமாக நடித்த படம் இதுவாகத்தான் இருக்கும். வெள்ளையாக காட்டுகிறேன் பேர்வழி என்று சுண்ணாம்புசுவர் போல் காட்டியிருக்கிறார்கள். பாடல்களிலும் தமன்னா பெரிதாய் கவரவில்லை.

வில்லன் அட்டகாசமான தோற்றத்தில் அசத்துகிறார். அவருக்கு லிப் சிங்க் ஆகும்படி டயலாக் சொல்லிக்கொடுத்திருக்கலாம். அவர் பேசுவதற்கும், வசனங்களுக்கும் சம்மந்தமே இல்லாமல் இருக்கிறது. படத்தின் மிகப்பெரிய பிளஸ் வடிவேலுதான் கை விலங்கிட்ட ரெளடியிடம் இவர் மாட்டிக்கொண்டு தவிக்கும் காட்சி ரசிகர்களின் வயிறை பதம் பார்ப்பது உறுதி. வெண்ணிற ஆடை மூர்த்தியின் கச்சேரியில் இவர் செய்யும் சேஷ்டைகள் குபீர் சிரிப்பை வரவழைக்கும். விஜய்க்கு இணையாக ரசிகர்ககளின் கைத்தட்டலை பெறும் ஆள் வடிவேலுதான்.

இயக்குனர் ராஜ்குமார் பெரிதளவில் கதை சொல்லவில்லை என்றாலும், திரைக்கதையில் தொய்வு ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறார். விஜய்க்கான படத்தில் இயக்குனரை பெரிதும் எதிர்பார்க்க முடியாது என்பதால் டைரக்டர் டச் காட்சிகள் மிகக்குறைவு. வசனங்களில் பொறி பறக்க வைத்திருக்கிறார். ஒளிப்பாதிவாளர் ஏகாம்பரம் சுறாவை திமிங்கலம் ரேஞ்ஜ்'க்கு மிகைப்படுத்தி காட்டியிருக்கிறார். சுறாவின் வேட்டைக்கு பற்களாய் உதவியிருக்கிறார். கடல் சார்ந்த பகுதிகள் அவ்வளவு அழகு அதிலும் இரவு நேர காட்சிகளில் லைட்டிங்கும், கேமராக்கோணங்களும் ரசனை. விஜய்யை அவ்வளவு அழகாக காட்டியவர் தமன்னா விஷயத்தில் கோட்டை விட்டிருப்பது ஏனோ?


சுறாவின் அசுரப்பாய்ச்சலுக்கு உதவியிருக்கும் மற்றொருவர் எடிட்டர் டான்மேக்ஸ். சண்டைக்காட்சிகளிலும், பாடல் கட்டிங்குகளிலும் இவர் காட்டி இருக்கும் நேர்த்தி பாராட்டத்தக்கது.மணி சர்மா தெலுங்கு ட்யூன்களையே பயன்படுத்தி இருந்தாலும் 'நான் நடந்தால் அதிரடி' பாடலிலும், 'தஞ்சாவூர் ஜில்லாக்காரி' பாடலிலும் ரசிகர்களை ஆட்டம் போட வைத்திருக்கிறார். ஆனாலும் மனதை வருடும் ஒரு மெலடி பயன்படுத்தி இருக்கலாம். சுறாவை தன்னுடைய அரசியல் சிம்மாசனத்தை நோக்கிய பயணத்தில் படிக்கெட்டாக உபயோகப்படுத்தி இருக்கிறார் விஜய். சமீப காலத்தில் வெளிவந்த விஜய் படங்களோடு ஒப்பிடுகையில் நிச்சயமாய் இந்த சுறாவை ரசிக்கலாம்.