பக்கங்கள்

10 மே 2010

மதுபோதையில் கார் செலுத்திய நடிகர் கைது.



குடிபோதையில் தாறுமாறாக கார் ஓட்டிய நடிகரை போலீசார் வாகன சோதனையின்போது மடக்கினர். ஆனால், அவர் நிற்காமல் பறந்ததால், அவரை போலீசார் விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர். சினிமாவில் வருவது போன்ற சம்பவத்தில் ஒரு சினிமா நடிகரே சிக்கிய இந்த ருசிகர நிகழ்ச்சி பற்றிய விவரம் வருமாறு:- தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் பி.நவ்தீப். தமிழில் திருவாசகம் என்ற சினிமாவிலும், பெயரிடப்படாத ஒரு சினிமாவிலும் நடித்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் இவர் ஒரு காரில் மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருந்தார். அந்த காரில் அவரது நண்பர்கள் சிலரும் இருந்தனர். பஞ்சார ஹில்ஸ் பகுதியில் போலீசார் அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். ஒரு கார் மின்னல் வேகத்தில் தாறுமாறாக வருவதைக் கண்ட போலீசார் அந்த காரை தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர். ஆனால் கார் நிற்காமல் காற்றை கிழித்துக் கொண்டு பறந்தது. ஆனாலும் போலீசார் விடாமல் அந்த காரை துரத்தினர். சிறிது தூரத்தில் அந்த காரின் முன்னால் போலீசார் தங்களது வாகனத்தை குறுக்காக நிறுத்தி மடக்கி பிடித்தனர். காரில் இருந்தவர்களை கீழே இறக்கி சோதனை போட்டனர். அப்போது அவர்கள் அனைவரும் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. நடிகர் நவ்தீப்பும் குடிபோதையில் இருந்தார். அவர்தான் காரை ஓட்டி வந்ததும் தெரிய வந்தது. அனைவரையும் கைது செய்வதாக கூறி போலீசார் ஒரு ஆட்டோவில் ஏற்றினர். ஆனால், நடிகர் நவ்தீப் ஆட்டோவில் ஏற மறுத்து போலீசாருடன் தகராறில் ஈடுபட்டார். பின்னர் ஒரு வழியாக அவரையும், அவரது நண்பர்களையும் போலீசார் கைது செய்தனர். அனைவரும் பஞ்சார ஹில்ஸ் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். நடிகர் நவ்தீப் மீது குடி போதையில் கார் ஓட்டியது, அரசு ஊழியர்களை (போலீசாரை) தங்களது கடமையை செய்ய விடாமல் தடுத்தது, அரசு ஊழியர்களை (போலீசாரை) தாக்கி காயம் உண்டாக்கியது ஆகிய 3 குற்றச்சாட்டுகளின் பேரில், இந்திய தண்டனை சட்டத்தின் (ஐ.பி.சி.) 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக