பக்கங்கள்

22 மே 2010

ரெட்டைச்சுழி,பக்கம் ஒரு பார்வை.



இயக்குனர்களில் சிகரம், இமயமான பாலச்சந்தரும் பாரதிராஜாவும் இணைந்து நடிப்பு வேஷம் கட்டியுள்ள படம். ஒரே கிராமத்தில் எதிர்எதிர் வீட்டில் வசிக்கும் இவர்கள் வெவ்வேறு அரசியல் கொள்கைகளை கடைபிடிப்பதால் பகையாளியாகின்றனர். கூட்டங்களிலும், விழாக்களிலும் மோதிக்கொள்கின்றனர். இந்த சண்டை இரு வீட்டு குழந்தைகளிடமும் பரவுகிறது. அவர்களும் கோஷ்டியாக அடிதடி போடுகிறார்கள்.

குடும்பத்தினரை மிரட்ட ராணுவத்தில் இருக்கும் ஆரியை பாலசந்தர் இல்லத்து குழந்தைகள் கடிதம் போட்டு வர வைக்கின்றனர். ஆரியோ பகையை மறந்து அஞ்சலி பின்னால் சுற்றுகிறார். அவர்கள் காதல் இருவீட்டு குழந்தைகள் மனதை மாற்றுகிறது. நட்பாகிறார்கள். காதல் ஜோடியை சேர்த்து வைக்க போராடுகின்றனர். பாலச்சந்தர், பாரதிராஜா இருவரும் காதலை பிரிப்பதில் பிடிவாதமாக நிற்கின்றனர். அவர்கள் மனதை குழந்தைகள் எவ்வாறு மாற்றி காதலுக்கு சம்மதிக்க வைக்கிறார்கள் என்பது கிளைமாக்ஸ்...

கம்யூனிசம் பேசும் பாரதிராஜா. கதர் சட்டைக்குள் கவுரவம் காட்டும் பாலச்சந்தர் குஸ்திகளை கலகலப்பாக படமாக்கி உள்ளார் இயக்குனர் தாமிரா.

தொண்டர்களை திரட்டி சாலையை மறித்து கூட்டம் நடத்தும் பாரதிராஜாவை துப்பாக்கியால் சுட ஆவேசமாவது... அவரை பாராட்டி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை ஆட்கள் வருகிறார்களா என்று அக்கம் பக்கம் பார்த்தபடியே கிழித்து எறிவது... பெற்றோர், ஆசிரியர் சங்கத்துக்கு தலைவவராக பாரதிராஜா தேர்வாகும்போது குழந்தையே இல்லாத நபர் இந்த பதவிக்கு தகுதியா என கேலி செய்வது... என்று படம் முழுக்க கிழட்டு சிங்கத்தின் கர்ஜனை செய்கிறார் பாலச்சந்தர்.

பாரதிராஜாவும் கத்தி, கம்பு இல்லாமல் வார்த்தைகளால் வன்மம் காட்டுகிறார். பெற்றோர் எதிர்ப்பால் காதலி தூக்கில் தொங்கி சாகும் அவரது பிளாஷ்பேக் காதல் ஜீவன்.

ராணுவ வீரராக வரும் ஆரி குழந்தைகளுக்காக பாரதிராஜா குடும்பத்துடன் போலியாக மோதுவதும் அஞ்சலியை காதலிப்பதுமாய் அழுத்தம் பதிக்கிறார். தாத்தாவுக்கு பயந்து காதலை மூடி மறைக்கும் அஞ்சலி ஒரு கட்டத்தில் காதலை வாய் விட்டுத்தான் சொல்லணுமா! என் கண்ணை பார்த்தால் தெரியலியா? என்று கேட்டு மனதில் வியாபிக்கிறார். ராணுவத்தின ரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக வரும் கருணாஸ் நாங்க நாட்டு மிலிட்டரி என்று மோதுவது சிரிப்பு. என்ன தோழரே என்று பாரதிராஜாவை கலாய்க்கும் சிறுவனும் குஷ்பு பெயரில் யோசனை சொல்லும் சிறுமியும் ஈர்க்கின்றனர்.
பட்டாளத்துக்காரராக வரும் அழகம் பெருமாள், பாலச்சந்தர் மகனாக வரும் ஸ்ரீதர், இளவரசு, மனோபாலா பாத்திரங்களும் வலு சேர்க்கின்றன.
கார்த்திக் ராஜா இசையில் கிராமிய வாசம். செழியன் ஒளிப்பதிவு பலம்.
இரு வயோதிகர்களின் பகைமையை கச்சிதமாக செதுக்கியுள்ளார் இயக்குனர் தாமிரா. திரைக்கதை அழுத்தம் இல்லாததும் காட்சிகள் குழப்பமாய் நகர்வதும் குறை. சிறுவன், சிறுமி “ஐ லவ் யூ” சொல்வதும், முத்தம் கேட்பதும் ஜூனியர் ஆபாசம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக