மூன்றாம் பிறை, கிழக்குவாசல், இதயம், பார்த்திபன் கனவு, எம்மகன், ஜெயங்கொண்டான் ஆகிய படங்களை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் தயாரித்தவர், டி.ஜி.தியாகராஜன். இவர் வழங்கும் புதிய படம், `பாணா காத்தாடி.'
சென்னையின் ஒரு மூலையில், காத்தாடி விடுவதையே சுவாசமாக கொண்ட ஒரு இளைஞனின் வாழ்க்கைப்பதிவு இது. முழுக்க முழுக்க நிஜ மனிதர்களை வைத்து, எதார்த்தம் தவறாமல், இந்த படத்தை உருவாக்கி வருகிறார்கள்.
அடித்தட்டு மக்கள் என்றாலே அழுக்கானவர்கள், அழுதுகொண்டே இருப்பவர்கள் என்ற நம்பிக்கையை மாற்றி, அவர்களின் வாழ்க்கையில் உள்ள சுவாரஸ்யம், ஆனந்தம், அன்பு ஆகியவற்றை இந்த படத்தில் பதிவு செய்து வருகிறார்கள். 90 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்தது.
சர்வதேச அளவில், குஜராத்தில் நடைபெற்ற பட்டம் விடும் போட்டி, இந்த படத்துக்காக சமீபத்தில் படமாக்கப்பட்டது.
`பாணா காத்தாடி' படத்தில், நடிகர் முரளியின் மகன் அதர்வா கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். பிரசன்னா, கருணாஸ் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கே.வி.ஆனந்திடம் இணை ஒளிப்பதிவாளராக இருந்த ரிச்சர்ட் எம்.நாதன், இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். திரைப்பட கல்லூரி மாணவரும், `விடியலை நோக்கி' குறும் படத்துக்காக தேசிய விருது பெற்றவருமான பத்ரி வெங்கடேஷ், இந்த படத்தின் திரைக்கதை அமைத்து டைரக்டு செய்கிறார்.
செந்தில் தியாகராஜன், டி.அர்ஜுன் ஆகிய இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக