பக்கங்கள்

26 மே 2010

கனகவேல் காக்க,திரை விமர்சனம்.



நீதிபதிக்கு 'ரைட்' சைடில் நின்று, 'ராங்' சைட் தீர்ப்பாகவே கேட்டு ஆத்திரப்படும் டவாலிதான் கரண். கண்ணெதிரே தப்பிக்கும் தாதாக்களுக்கு இந்த டவாலி தரும் ஆஃப் சைட் தீர்ப்புகள்தான் விறுவிறுப்பான திரைக்கதை. படம் நகரும் ஒவ்வொரு வினாடியும், 'டவாலி...சமாளி' என்று பிரார்த்திக்கிறது மனசு. அருவாளுக்கு முதுகு பக்கமும் கூர்மையை வச்ச மாதிரி சுளீர் டைப் வசனங்களும் சேர்ந்து கொண்டதால், தீப்பிடிக்காத குறைதான் தியேட்டரில்!
முதல் காட்சியிலேயே மினிஸ்டரை கொல்ல முயல்கிறார் கரண். அடுத்தடுத்த காட்சியில் கோர்ட். அங்கேயும் அவர்தான். இந்த கொலை முயற்சிக்கு பின்னாலிருப்பது முன்பகையும், முக்க முக்க ஒரு பிளாஷ்பேக்கும்தான் என்று யூகித்தால், அதையும் தாண்டி சமூக அக்கறையை கரணுக்குள் நுழைத்து கேரக்டருக்கு இன்னும் 'வெயிட்' ஏற்றுகிறார் புதுமுக இயக்குனர் கவின்பாலா.
அப்பாவி மூதாட்டி ஒருவரின் 15 லட்சத்தை லபக்கிக் கொள்ளும் ராஜ்கபூர், சரியான சாட்சியங்கள் அமையாததால் விடுதலை ஆகிறார். இன்னொரு சம்பவத்தில் கற்பழிப்புக்கு ஆளான ஏழைப்பெண் ஒருத்தி, நீதிக்கு பதிலாக விபச்சாரி என்று பழி சுமத்தப்பட்டு தண்டனை பெறுகிறார். இப்படி கண்ணை மூடிக்கொண்டு சட்டம் ஒரு தீர்ப்பு எழுதினால், கண்களில் ரத்தம் சிவக்க டவாலி ஒரு தீர்ப்பு எழுதுகிறார். எப்படி, எங்கே, ஏன்? ஆக்ஷன் பிலிம் பார்த்தே பழக்கப்பட்ட அத்தனை ரசிகர்களும் அசுவாரஸ்யமாக எதிர்பார்க்கும் அந்த பிளாஷ்பேக். ஆனால் அதற்குள்ளும் ஒரு ஜீவனை புகுத்தி கண்கலங்க வைத்திருப்பது இயக்குனரின் தனி சாமர்த்தியம்.
பிணமே இல்லாத சவக்குழிக்கு முன் உட்கார்ந்தபடி ஒருவன் சங்கு ஊத, "ஏய் யார்றா அது?" என்கிற ராஜ்கபூருக்கு அது தனக்கான குழிதான் என்பது தெரியவருகிற போது சுவாரஸ்யம் தொற்றிக் கொள்கிறது நமக்கு. தப்பட்டை அடித்துக் கொண்டே அவரை சம்ஹாரம் செய்கிற கரண் தப்பித்து ஓடுவதெல்லாம் பரபரப்பு. ஆனால் அந்த சேசிங், சினிமாட்டிக் கிராஃப்பை தாண்டாமல் நிறைவுறுவதுதான் ப்ச்!
விரட்டி விரட்டி காதலிக்கும் ஹரிப்ரியாவிடம் ஒரு துள்ளல் இருக்கிறது. டிராபிக் கான்ஸ்டபிளை ஏய்ப்பதும், லிப்ட் கொடுக்கிற வழுக்கை தலையனை அடுத்த ஐந்தாவது வினாடியில் அபிக்குட்டி என்று கொஞ்சுவதுமாக செம ரவுசுதான். ஆனால் கதை விறுவிறுப்பாக ஒடிக் கொண்டிருக்கும்போது தலையை நுழைத்து டூயட் பாடுவதுதான் சுத்த போர் பெண்ணே...
ஃப்பிரீக்க்க்க்க்.... என்று சிரித்தபடி வரும் கோட்டா சீனிவாசராவ், தனக்கான கோட்டாவை தாண்டியும் டிராவல் செய்கிறார். ஆனால் அதுகூட தனி சுவாரஸ்யம்தான். "நீ லாயர், லீகல நீ பார்த்துக்கோ. நான் மினிஸ்டர். இல்லீகல நான் பார்த்துக்கிறேன்" என்று சலம்புவதும், "ஐயா" என்று வேலைக்காரன் ஓடிவர, அவனை திரும்பிப் பார்க்கும் மற்றொருவனை "ஐயான்னா நீயாடா?" என்று நெட்டி தள்ளுவதுமாக கோட்டாவின் எடக்கு மடக்கு ஸ்டைலே தனிதான்ப்பா...!
மண்வெட்டி போதும் என்று நினைக்கிற இடத்தில் பொக்லைனே வந்தது மாதிரி, எல்லாமே அதிகப்படிதான் கரண் ஸ்டைல். ஆனால் இந்த படத்தில் அழுவதில் துவங்கி ஆத்திரப்படுவது வரை எந்த காட்சியிலும் கச்சிதத்தை தாண்டவில்லை என்பதால், கரணுக்கு முக்கியமான படம் இது.
பா.ராகவனின் வசனங்களுக்கு வாகாக கன்னத்தை கொடுத்துவிட்டு தடவிக் கொள்கிறது நீதித்துறை. 'இங்க வர்ற சாட்சிகளிடம் பகவத் கீதையை கொடுத்து நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையை தவிர வேறில்லை என்று சத்தியம் வாங்குறீங்களே, ஒரு தடவையாவது இதை நீதிபதிகளிடமோ, வக்கீல்களிடமோ காட்டி சத்தியம் வாங்கியிருக்கீங்களா?' இப்படி படம் நெடுகிலும் யோசிக்க வைக்கிற வசனங்கள்...
பாடல்களில் 'சுத்துகிற பூமியிலே' அற்புதமான மெலடி. பாராட்டுகள் விஜய் ஆன்ட்டனி. 'மின்சாரமே மின்சாரமே' பாடல் இனிமையாக இருந்தாலும் பட வேகத்தை தடுக்கிற ஸ்பீட் பிரேக்கர் என்பதால் உறுத்தல்!
பராசக்தி துவங்கி, விதி, சட்டம் ஒரு இருட்டறை, நீதிக்கு தண்டனை என்று தொடர்கிற நீதிமன்ற பட வரிசையில் கனகவேலும் தன்னுடைய பதிவை உறுதி செய்யும். அதுவும் பெயருக்கேற்ற கூர்மை கொஞ்சமும் குறையாமல்!
-ஆர்.எஸ்.அந்தணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக