பக்கங்கள்

30 மே 2010

பொறியியல் கல்லூரி மாணவி தற்கொலை!


கேளம்பாக்கம் அருகேயுள்ள தையூரில் எஸ்.எம்.கே. போம்ரா பொறியியல் கல்லூரி உள்ளது. 2 ஆயிரம் பேர் படிக்கின்றனர். மாணவ, மாணவிகளுக்கு தனித்தனி விடுதிகள் உள்ளன. 300 மாணவிகள் விடுதியில் தங்கியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள். இந்த கல்லூரியில் உத்திரபிரதேச மாநிலம் அலிகாரை சேர்ந்த விஜயகுமார் பச்சீஷ்யா என்பவரின் மகள் அனித்ரா (19) முதலாண்டு இ.சி.இ. படித்தார். நேற்று முன்தினம் இரவு அறையில் தனியாக படிக்க விரும்புவதாக அனித்ரா கூறியுள்ளார். அவருடன் தங்கியிருந்தவர்கள் அருகில் இருந்த அறைக்கு சென்று தூங்கினர். நேற்று காலை அனித்ரா இருந்த அறைக்கதவு திறக்கப்படாததால், மாணவிகள் கதவை உடைத்துப் பார்த்தனர். அனித்ரா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இந்த விவகாரம் கல்லூரி முழுவதும் பரவியது. ஆத்திரம் அடைந்த மாணவர்கள் கல்லூரி தலைவரின் உதவியாளர் சதீஷ் கண்ணாவின் அறையை அடித்து உடைத்தனர். கம்ப்யூட்டர், பீரோ மற்றும் ஆவணங்களை சேதப்படுத்தினர். சதீஷ் கண்ணாவை கைது செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். விடுதி வார்டன் நளினி, கேளம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். மாமல்லபுரம் டிஎஸ்பி சம்பந்தமூர்த்தி, கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் அசோகன் ஆகியோர் மாணவர்களை சமாதானப்படுத்தினர். அனித்ராவின் உடலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி மாணவ, மாணவிகள் போலீசாரிடம் கூறியதாவது: கல்லூரி வளாகத்துக்குள் மாணவ, மாணவிகள் ஒருவரோடு ஒருவர் பேசக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டது. மாணவர்களை கண்காணிக்க கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு அனைத்து வகுப்பறையிலும் கேமரா பொருத்தப்பட்டது. கடந்த வாரம் மாணவர் ஒருவருடன் அனித்ரா பேசியது கேமராவில் பதிவானது. இதைப் பார்த்த கல்லூரித் தலைவர் ஸ்ரீகுமார் போம்ரா, அனித்ராவை அழைத்துத் திட்டினார். ரூ.1000 அபராதம் விதித்தார். நேற்று முன்தினம் மாலை கல்லூரி தலைவரின் உதவியாளர் சதீஷ் கண்ணா, விடுதிக்கு வந்து அனித்ராவை ஆபாசமாக திட்டினார். அந்த மன உளைச்சலில் அனித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்றனர். மாணவி இறந்தது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தந்தை விஜயகுமார் நேற்று கேளம்பாக்கம் வந்தார். தனது மகள் சாவுக்கு கல்லூரி தலைவர் ஸ்ரீகுமார் போம்ரா, அவரது உதவியாளர் சதீஷ் கண்ணா ஆகியோர்தான் காரணம் என்று புகாரில் தெரிவித்தார். கேளம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து, சதீஷ் கண்ணாவை கைது செய்தனர். கல்லூரி தலைவர் ஸ்ரீகுமார் போம்ராவை தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக