ஏஞ்சல் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஜி.எம்.பாலாஜி தயாரித்து வரும் படம், தம்பி அர்ஜூனா. இந்த படத்தில், அர்ஜூனா என்ற கதாபாத்திரத்தில் ரமணா நடிக்க, அவரது அண்ணன் தர்மன் என்ற கதாபாத்திரத்தில் பெரோஸ்கான் நடிக்கிறார். இவர், சரித்திரம் என்ற மலையாள படத்தில் நடித்தவர்.
போலீஸ் அதிகாரியாக, வில்லன் வேடத்தில் சுமன் நடிக்கிறார். இன்னொரு வில்லனாக பிரான்சை சேர்ந்த தினேஷ் நடிக்கிறார். கதாநாயகிகளாக ஆஷிமா, ஷர்மிளா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் கஞ்சா கருப்பு, `நான் கடவுள்' ராஜேந்திரன், சிங்கமுத்து, பாலாசிங் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இசையமைப்பாளர் தினா முதன்முதலாக இந்த படத்தில் நடிகராக முகம் காட்டுகிறார்.
`தம்பி அர்ஜூனா' படத்துக்காக ஒரு பரபரப்பான `என்கவுன்டர்' காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. இந்த காட்சியை படமாக்கியபோது, உண்மையிலேயே `என்கவுன்டர்' நடக்கிறதோ என பதற்றப்பட்டு, பொதுமக்கள் ஓட்டம் பிடித்தார்கள்.
சுமனுடன், ரமணாவும், பெரோஸ்கானும் மோதும் உச்சக்கட்ட சண்டை காட்சி, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது. சண்டை காட்சியின் முடிவில், அந்த அரங்குகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டன.
வேகமாக வளர்ந்து வரும் இந்த படத்தின் கதை-திரைக்கதை எழுதி டைரக்டராக அறிமுகம் ஆகிறார், விஜய் ஆர்.ஆனந்த்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக