பக்கங்கள்

24 ஜூன் 2010

கொல கொலயா முந்திரிக்கா,பட நாயகி ஷிகாவுடன் ஒரு சந்திப்பு.








"கொல கொலயா முந்திரிக்கா' படத்தில் மடிசார் கட்டிக்கிட்டு, ஐய்யங்கார் பாஷையில் கொஞ்சிக் கொஞ்சிப் பேசி நடித்து எல்லோர் மனதிலும் இடம் பிடித்த வர் ஷிகா. அண்மையில் ஒரு மாலை பொழுதில் அவரை சந்தித்தபோது படத்தில் பார்த்த அதே சுறுசுறுப்போடும், குறும்புத்தனங்களோடும் நம்மிடம் பேசினார்.
உங்கள் பூர்வீகம்?
நான் பெங்களூரைச் சேர்ந்த பெண். என் அப்பா ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறார். அம்மா இல்லத்தரசி. ஒரு அண்ணன் இருக்கிறார். நான் பி.காம் படித்திருக்கேன். எனக்கு வெஸ்டர்ன் டான்ஸýம், பரதநாட்டியமும் தெரியும். என் குடும்பத்தில் இருந்து சினிமாவில் நடிக்க வந்த முதல் ஆள் நான்தான்.
அதனால் முதலில் எங்கள் வீட்டில் யாரும் எனக்கு சப்போர்ட் பண்ணவில்லை. ஆனால் இப்போது நான் நடித்த படங்களை பார்த்து நிறைய பேர் பாராட்டுவதால் அதை பார்த்து என் குடும்பத்தினருக்கு என் மீது ஒரு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
ஷிகா என்பது உங்கள் நிஜப் பெயரா?
என் நிஜப் பெயர் பாவ்னா. இங்கே ஏற்கனவே ஒரு பாவனா இருப்பதால் குழப்பம் வரவேண்டாம் என்பதால் "ஷிகா'ன்னு வைத்திருக்கிறேன். ஷிகா என்றால் பிக், மிக உயரத்தில் என்று அர்த்தம்.
"கொல கொலையா முந்திரிக்கா' படத்தில் நடிக்கும் வாய்ப்பு எப்படி கிடைத்தது?
கல்லூரியில் படிக்கும்போது சின்ன சின்ன ஓவியங்கள் வரைந்து கொண்டிருப்பேன். அதன் மூலம் ஒரு கன்னட படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுதான் என் முதல் படம். சென்னைக்கு ஒரு உறவினரின் திருமண வைபவத்திற்கு வந்திருந்தேன்.
அப்போது என்னை பார்த்த இயக்குனர் மதுமிதா மேடம், எனக்கு ஃபோன் பண்ணி நடிக்க விருப்பமா என்று கேட்டு, ஃபோட்டோ ஷூட்டுக்கு வரச் சொன்னார். சரின்னு அவரை போய் பார்த்தேன். ஒரு வாரம் கழித்து நான் செலக்ட் ஆகியிருப்பதாக அவர் சொன்னார். அப்போது எனக்கு ஏற்பட்ட சந்தோஷத்துக்கு அளவே கிடையாது.
தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். காரணம் மற்ற மொழிகளில் நடிக்கும் நடிகைகள் கூட தமிழில் நடிக்க ஆசைப்படுவார்கள். அந்தளவுக்கு இன்று தமிழ் திரையுலகம் உலக அளவில் பேசப்பட்டு வருகிறது. எனக்கு தமிழ் தெரியாது என்பதால் முதலில் இரண்டு வாரக் காலம் தமிழை கற்றுக்கொண்டேன்.
அதன் பிறகுதான் சென்னைக்கு வந்தேன். ஷூட்டிங் ஆரம்பிப்பதற்கு ஒரு வாரம் முன்னாடி மதுமிதா மேடம் எனக்கு நிறைய பயிற்சி கொடுத்தார். தமிழில் என்னோட முதல் படமே ஒரு பெண் இயக்குனரது படமாக அமைந்ததில் எனக்கு பெருமைதான்.
மடிசார் கட்டி மாமியாக நடித்தது குறித்து?
இப்படத்தில் எனக்கு கிடைத்த வேடம் ரொம்பவும் வித்தியாசமாது. ஒரு திருட்டு பெண்ணாக, துறு துறுன்னு இருக்கிற மாதிரியான அந்த வேடத்தில் நடிக்கும்போது ஜாலியாக இருந்தது. மதுமிதா மேடம்தான் எனக்கு மடிசார் கட்டி விட்டார்.
பொதுவாக எனக்கு சேலை கட்டுவது ரொம்பப் பிடிக்கும். ஆனால் மடிசார் கட்டிவிட்டு ஐய்யங்கார் பாஷையில் வசனங்கள் பேசி நடித்தபோதுதான் கொஞ்சம் கஷ்டப்பட்டேன். எனக்கு அப்போது தமிழ் அவ்வளவு தெரியாது.
அதுவும் ஐய்யர் பாஷையில் பேசுவது ரொம்ப கஷ்டம். அப்போது படத்தின் ஹீரோ கார்த்திக் குமார் எனக்கு நிறைய உதவி பண்ணினார். அவர் ரொம்பவும் ஹ்யூமர்சென்ஸ் உள்ளவர். அது எனக்குப் பிடித்திருந்தது.
இப்போது வேறு என்னென்ன படங்களில் நடிக்கிறீர்கள்?
"வாரேவா' என்ற கன்னட படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இந்தப் படம் ஒரு மராட்டிய படத்தைத் தழுவியது. விஜயலட்சுமி என்ற பெண் இயக்குனர்தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார். "கொல கொலையா முந்திரிக்கா' படத்திற்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வருகிறது. எல்லாம் பேச்சு வார்த்தையில் இருக்கிறது. முடிவானதும் சொல்கிறேன்.
எந்த மாதிரியான வேடங்களில் நடிக்க ஆசை?
இப்போதுதான் சினிமாத் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறேன். இப்பப் போய் நான் அப்படிதான் நடிப்பேன், இப்படிதான் செய்வேன் என்றெல்லாம் சொல்ல முடியாது. அதனால் வருகிற வாய்ப்புகளில் இருந்து நல்ல வேடங்களை தேர்ந்தெடுத்து நடிக்கலாம் என்றிருக்கிறேன்.
கிளாமர் வேடங்களில் நடிப்பீர்களா?
கண்டிப்பாக நடிப்பேன். ஆனால் அந்த கிளாமர் அந்த கேரக்டருக்கு தேவையாக இருக்க வேண்டும். தமிழ்த் திரையுலகிலுள்ள நிறைய பேர் இந்த கேள்வியைத்தான் கேட்கிறார்கள். கதைக்கும், கேரக்டருக்கும் கவர்ச்சி தேவை என்றால் நடித்துதானே ஆகவேண்டும்? இப்போதுள்ள சூழ்நிலையில் கிளாமராக நடிக்க மாட்டேன் என்றெல்லாம் சொல்ல முடியாது. காரணம் கிளாமருக்கு முக்கியத்துவம் உள்ள ஹீரோயின் பாத்திரங்களைத்தான் உருவாக்குகிறார்கள்.
தமிழில் உங்களுக்குப் பிடித்த நடிகர், நடிகை யார்?
என் ஆல் டைம் ஃபேவரிட் நடிகர்கள் கமல், விக்ரம், சூர்யா ஆகியோர்கள். நடிகைகளில் சுஹாசினி, ரேவதி, ஸ்ரேயா, தமன்னா ஆகியோரை ரொம்பப் பிடிக்கும்.
இவ்வளவு ஸ்லிம்மா இருக்கிறீர்களே, எப்படி?
அது இயற்கையானது. ஸ்லிம்மா இருப்பதற்காக சாப்பாடு விஷயத்திலெல்லாம் கட்டுப்பாடு கிடையாது. சைவம், அசைவம் என்று எனக்குப் பிடித்ததையெல்லாம் விரும்பி சாப்பிடுவேன். ஒருபோதும் வயிற்றுக்கு வஞ்சனை செய்ய மாட்டேன் (சிரிக்கிறார்).
உங்கள் பொழுதுபோக்கு?
நிறைய படங்கள் பார்ப்பேன். நேரம் கிடைக்கும்போது டான்ஸ் பிராக்டீஸ் செய்வேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக