ஈழத்தமிழர்களை கொன்றுக்குவித்த சிங்கள பூமிக்கு நடிகர், நடிகைகள் செல்லக்கூடாது என்று தமிழ்த் திரையுலகம் உத்தரவு போட்டிருந்தது. அதை மீறி அசின் இலங்கை சென்றார். அசின் மீது தமிழ் சினிமா அமைப்புகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட தமிழ் அமைப்புகள் அசின் படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம் செய்தன.
அப்போது அசின் நடித்த படங்களைப் புறக்கணிப்பதாகவும் அறிவித்தன. அதனால் விஜய் - அசின் நடித்த்துவரும் காவலன் திரைப்படம் வெளியிடப்படுவதில் சிக்கல் ஏற்படும் என்ற நிலை இருந்தது.
ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை. திடீரென்று சரத்குமார் அசினுக்கு ஆதரவு தெரிவிக்க சூழ்நிலையே மாறிப்போனது. அதுவரை அசினுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற சினிமா அமைப்புகள், அவர் மன்னிப்புக் கேட்டால் போதும் என்று கூறத் தொடங்கின.
அதன் பிறகு ‘சென்னைக்கு வரவே பயமாக இருக்கு’ என்ற அசின் தமிழகத்திலும், தமிழ்த்திரையுலகிலும் சுதந்திரப் பறவையாக வலம் வரத்தொடங்கினார்.
இப்படியான நிலையில் 16ந் தேதி இரவு சென்னை ஜி.ஆர்.டி ஓட்டலில் காவலன் படம் தொடர்பான பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விஜய், அசின், வடிவேலு, இயக்குனர் சித்திக் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்பில் கண்டிப்பாக கேட்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஒரு ‘கேள்வி’... கேட்கப்பட்டது. ஆனால் பதில் தான் ம்ம்ம்ஹூம்... ‘பிரண்ட்ஸ்’ திரைப்படத்திற்கு பிறகு விஜய் - சித்திக் இணைந்திருக்கும் படம் ‘காவலன்’. இந்தப் படம் காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து நகைச்சுவையான திரைக்கதையில் பயணிக்கிறதாம். வழக்கமான விஜய்யின் கமர்ஷியல் ஆக்ஷன் இதில் குறைவு. வடிவேலுவின் கூட்டணியில் காமெடிக் கொடி மிகமிக உயரத்தில் ஏற்றப்பட்டிருக்கும் படம் காவலன். சுருக்கமாக சொன்னால் இன்னொரு பிரண்ட்ஸ்.
சரி; இப்போ படத்தை விட முக்கியமான ஒரு விஷயத்துக்கு வருவோம்...
அசின் இலங்கை போன விவகாரத்தால், அவர் நடிக்கும் படங்களை புறக்கணிக்கப்போவதாக சில அரசியல் அமைப்புகள் சொல்லியுள்ளன. இதை எப்படி சமாளிக்கப் போகிறீங்க? என்ற கேள்வி காவல் படக்குழுவிடம் கேட்கப்பட்டது. அதற்கு இயக்குனர் சித்திக்,“படத்தை நல்லபடியா எடுத்து முடிப்பது என் கடமை. அதை முதலில் சிறப்பா முடிக்கனும். படம் வெளியாகும் போது ஏற்படும் பிரச்சனை பற்றி அப்போ பார்த்துக்கலாம்” என்றார்.
இந்தக் கேள்விக்கு விஜய்யின் பதில் மௌனம் மட்டுமே... மற்ற சில கேள்விகளுக்கு மட்டும்தான் வாயைத் திறந்தார்.
“ அசின் இந்திப் படங்களில் தற்போது பிஸியா இருக்காங்க. அவரை மீண்டும் தமிழுக்கு கொண்டுவரனும் என நினைத்தேன். வந்துட்டாங்க. இந்தப் படம் ரெண்டு வருசத்துக்கு முன்னாடியே நடிக்க வேண்டிய படம், அப்போது என்னால இதில் நடிக்க முடியாத சூழ்நிலை. அந்த வாய்ப்பு இப்போ அமைந்திருக்கு.
இந்தப் படத்தின் தலைப்பு, காவல்காரன், காவல் காதல் என்று பலவிதமாக கூறப்பட்டது. ஆனால் படதுக்கு ‘காவலன்’என்றுதான் தலைப்பு வச்சிருக்கோம். இதைத் தெரியப்படுத்ததான் இந்த பிரஸ் மீட்டிங். இந்தப் படம் செப்டம்பரில் ரிலீசாகுது.’’ என்று தனது படத்தைப் பற்றி மட்டுமே பேசி முடித்தார் விஜய்.
அசின் பேசும் போது , “விஜய்யுடன் நான் நடிக்கும் 3வது படம் இது. இதற்கு முன் நானும் விஜய்யும் நடித்த சிவகாசி, போக்கிரி படங்கள் பெரிய அளவில் ஹிட்டானது. அதேபோல் இந்தப் படமும் சூப்பர் ஹிட்டாகும். சித்திக் சாரின் படங்களை சின்னக் குழந்தையிலிருந்து பார்த்துட்டு வாரேன். இப்போ அவரின் படத்தில் நான் நடிக்கிறேன். இது எனக்கு உண்மையிலேயே பெருமையான விஷயம்” என்று வேகவேகமாக பேசினார்.
ஏன் அவர் அப்படி அவசரம் அவசரமாக பேசினார் என்பது எல்லோரும் அறிந்துதான். எங்க நம்மிடம் இலங்கை சென்றுவந்த விவகாரம் பற்றி கேட்டு விடுவார்களோ? என்று நினைத்தவரிடம்... அந்தக் கேள்வி கேட்கப்பட்டது.(இந்தப் பிரச்சனைக்கு அவர்தானே காரணம். இந்தக் கேள்வியை அவரிடம் கேட்காமல் வேற யாரிடம் கேட்பது)
ஆனால் அதற்கு, “அதுபற்றி எதுவும் கேட்காதீர்கள்’’ என்று மட்டும் கோபமாக கூறிவிட்டார் அம்மணி.
அப்படியே ஒருவேளை காவலன் படம் வெளியாவதில் ஏதாவது சிக்கல் வந்தால், அவருக்கென்ன... அம்மணிக்குதான் பாலிவுட் நடிகர்களின் சிவப்புக் கம்பள வரவேற்பு இருக்குதுல்ல...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக