காதலை பல பரிணாமத்தில் சொல்லும் திரைப்படங்களுக்கிடையே, இளைஞர்களுக்குக் காதலை கற்றுத்தர வருகிறது "ஆர்வம்'. மதுரையில் உள்ள ஒரு ஊரில் ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவம் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை "மூவி ட்ரீம்ஸ்' சார்பில் அனில்.டி. தயாரிக்கிறார்.
தயாரிப்பாளர் அனிலுக்கு இது இரண்டாவது படம். இதற்கு முன் இவர் தயாரித்த படம் "பாடகசாலை'. இந்தப் படத்தில் நடித்த சத்யா, சஞ்சய் ஆகியோர்தான் "ஆர்வம்' படத்திலும் நாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகியாக மீனு கார்த்திகா என்ற புதுமுகம் நடிக்கிறார். இவர்களுடன் கஞ்சா கருப்பு, வடிவுக்கரசி இருவரும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
உண்மையான காதல் எது? பொய்யான காதல் எது? என்பதை விளக்கும் வகையில் உருவாகியிருக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குபவர் ஆதித்யன். இவர் தமிழ் சினிமாவில் பல முன்னணி இயக்குநர்களிடம் பணிபுரிந்து அனுபவம் பெற்றவர். அவர் படத்தைப் பற்றி கூறும்போது,
""காதலை மையமாகக் கொண்ட கதையாக இருந்தாலும் அனைத்துத் தரப்பு மக்களும் கவரும் வகையில் திடீர் திருப்பங்கள் நிறைந்த காட்சிகளுடன் இப்படத்தின் திரைக்கதையை அமைத்திருக்கிறேன். படத்தின் தலைப்பிற்கேற்ப ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் சஸ்பென்ஸ் காட்சிகள் நிறைந்த திரைப்படமாகவும் இருக்கும்'' என்றார்.
இப்படத்தின் மூலம் ரோணி ராஃபேல் என்பவர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். பாடல்களை உடுமலை கரிசல் முத்து, எல்.ஜி.ரவிசங்கர் ஆகியோர் எழுதி உள்ளனர். தென்காசி, குற்றாலம், தென்மலை, மதுரை ஆகிய இடங்களில் இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக