சென்னையில் பி.இ., இன்ஜினியரிங் முடித்து அமெரிக்காவின், நியூயார்க்கில் உள்ள பிங்காம்டன் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்., பட்டம் பெற்றவர் நடிகர் கார்த்தி. எம்.எஸ்., பட்டம் பெற்றாலும் கார்த்தியின் ஆர்வமோ நடிப்பில் தான் இருந்தது. டைரக்டர் அமீரின், பருத்திவீரன் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான நடிகர் கார்த்தி, முதல் படத்திலேயே வித்யாசமான கேரக்டரில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். பருத்திவீரன் படத்தின் வெற்றி, தொடர்ந்து பையா, நான் மகான் அல்ல, ஆயிரத்தில் ஒருவன், சிறுத்தை போன்ற படங்களிலும் தொடர்ந்தது. மிககுறுகிய காலத்தில் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றார் கார்த்தி. இடையில் நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோர்களுடன் காதல் கிசு கிசுவில் சிக்கினார்.
இந்நிலையில் கார்த்திக்கு தீவிர பெண் வேட்டையில் ஈடுபட்ட அவரது பெற்றோர், ஈரோட்டை சேர்ந்த ரஞ்சனியை, கார்த்திக்கு திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். ஈரோட்டைச் சேர்ந்த சின்னசாமி - ஜோதி மீனாட்சி தம்பதிகளின் மகளாகிய ரஞ்சனி, சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் எம்.ஏ., ஆங்கிலத்தில் தங்க மெடல் பெற்றவர். இவர்களது திருமணம் வரும் ஜூலை மாதம் 3ம்தேதி நடைபெற இருக்கிறது.
வருங்கால மனைவி குறித்து கார்த்தி கூறுகையில், ரஞ்சனியை முதல்முறை பார்த்தபோது ஒரு மணி நேரத்துக்கு மேல் மனம்விட்டு பேசினேன். நான் நடித்த படங்களில் பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவன் பார்த்து ரசித்ததாக சொன்னார். கிராமத்து கலாசாரமும் நகரத்து நாகரிகமும் கலந்த ஒரு பெண் எனக்கு மனைவியாக வேண்டும் என்பது அப்பா அம்மாவின் ஆசை. அதே மாதிரி ஈரோடு மாவட்ட கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த ரஞ்சனி கிடைத்திருக்கிறார், என்றார்.
திருமணம் முடிந்த கையோடு கார்த்தியும் - ரஞ்சனியும் அட்லான்டிக் கடலும் பசிபிக் கடலும் சந்திக்கும் பகுதியிலுள்ள தஹிட்டி தீவுக்கு தேனிலவு செல்ல திட்டமிட்டுள்ளார்களாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக