ரத்த சரித்திரம் படத்தில் நடித்தது என் தப்புதான். இனி இந்த மாதிரி படங்களில் நடிக்கமாட்டேன், என்று கூறியுள்ளார் நடிகை ப்ரியாமணி.
பருத்திவீரன் படம் மூலம் மறு வாழ்வு பெற்றவர் நடிகை ப்ரியாமணி. ஆனால் அந்தப் படத்துக்குப் பிறகு எல்லோரும் பாவாடை தாவணி கெட்டப்பையே தருவதாகவும், கிளாமர் உடைகளில் ஆட விருப்பமாக இருப்பதாகவும் கூறி தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்தார் ப்ரியாமணி.
ஆனால் பருத்திவீரன் ரேஞ்சுக்கு அவருக்கு எந்தப் படமும் அமையவில்லை. மணிரத்னம் இயக்கத்தில் உருவான ராவணன் படத்தை பெரிதாக நம்பிக்கொண்டிருந்தார். ஆனால் அதில் கிடைத்ததோ துக்கடா வேடம்.
இந்த நிலையில் அவர் நடித்து தமிழில் நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்த ரத்தசரித்திரம் படம் வந்த வேகத்தில் பெட்டிக்குள் முடங்கிவிட்டது.
இதுகுறித்து வருத்தம் தெரிவித்துள்ள அவர் இப்படிக் கூறுகிறார், "ஆந்திராவில் நிகழ்ந்த ஒரு உண்மை சம்பவம்தான் அந்த படத்தின் கதை. அதனால் இப்படம் ஆந்திராவில் சுமாராகப் போனது. ஆனால் தமிழில் ஓடவில்லை. நான் நடித்த பருத்திவீரன் படத்தை பார்த்துதான் இப்படத்திற்காக ராம்கோபால் வர்மா என்னை தேர்வு செய்தார். எனக்கு கொடுத்த வேடத்தில் நான் நூறு சதவீத உழைப்பை கொடுத்தேன். நானே டப்பிங்கும் பேசினேன். இந்தப் படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெறவில்லை என்பது பெரிய வருத்தம் தந்துள்ளது. இந்த மாதிரி படங்களை ஒப்புக் கொள்வது தவறுதான். இனி ரத்த சரித்திரம் போன்ற சின்ன வேடங்களில் நடிக்க மாட்டேன். நல்ல கதையும், பாத்திரமும் அமைந்தால் மட்டுமே நடிப்பேன்", என்று கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக