தெலுங்குப் படத்தில் சீதை வேடத்தில் நடிகை நயனதாரா நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் இன்று சிவசேனா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தெலுங்கில் ஸ்ரீராம ராஜ்ஜியம் என்ற பெயரில் புதுப்படம் தயாராகிறது. ராமாயண கதையை இதில் படமாக்குகின்றனர். இதில் ராமர் வேடத்தில் என்டிஆர் பாலகிருஷ்ணா நடிக்கிறார். சீதை வேடத்தில் நடிக்க நயன்தாராவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இதற்கு ஆந்திராவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பிரபுதேவாவுடன் கள்ளக் காதல் கொண்டு, பிரபுதேவா குடும்பத்தில் புயலைக் கிளப்பி வரும் நயனதாரா, சீதை வேடத்தில் நடிப்பதா என்று அங்கு ஆட்சேபனை கிளம்பியது.
இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல், சீதை வேடத்தில் நயனதாராவே நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் இதற்கு இந்து அமைப்புகள் ரூபத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்து மக்கள் கட்சி தொடர் போராட்டத்தை அறிவித்துள்ளது.
இந்த நிலையில், சிவசேனா சார்பில் இன்று திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குமரன் நினைவுப் பூங்கா முன்பு இன்று நூற்றுக்கும் மேற்பட்ட சிவசேனா தொண்டர்கள் நயனதாரா சீதை வேடத்தில் நடிப்பதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதுகுறித்து அக்கட்சியினர் கூறுகையில், நயனதாரா சீதை வேடத்தில் நடிப்பதை ஏற்க முடியாது. இது இந்துக்களை இழிவுபடுத்தும் செயல். எனவே இதை எதிர்த்துப் போராட்டம் நடத்துகிறோம். நயனதாரா இந்த வேடத்தில் நடிப்பது உறுதியானால் அதை எதிர்த்து நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக