அடியே! அறிவு கெட்டவளே; மானம் கெட்டவளே; ரோசம் கெட்டவளே; வெட்கம் கெட்டவளே;....... உடம்பே கண்டம் துண்டமா வெட்டி உப்பு கண்டம் போட்டுருவேன்... ஏண்டி இந்த குருவம்மா அரும்பாடுபட்டு, கஷ்டப்பட்டு கோழி வளர்த்தா.... அதே வக்கனையா திருடி, வாய்க்கு ருசியா திங்க தெரியுதாடி.... அந்த வாயே கிழிச்சா..... அடியே அளந்து பேசு நாக்கை அறுத்துபுடுவேன் அறுத்து..... இது காந்திமதி 16 வயதினிலே படத்தில் படபடவென பேசும் வசனம்.
இதே போல் பாரதிராஜா இயக்கத்தில் அமைத்த இன்னொரு படமான மண்வாசனை படத்தில் பாட்டி வேஷத்தில் பழமொழிகள் சொல்லி நடிப்பில் சக்கபோடு போட்டிருப்பார். முத்து படத்தில் ரஜினியோடு காந்திமதி செய்யும் ரொமாண்டிக் கலாட்டா அனைவரும் ரசிக்கக் கூடியது.
இதயக் கோளாறு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காந்திமதி வடபழனியில் உள்ள தனது வீட்டில் (09.09.2011) வெள்ளிக்கிழமை காலமானார். காந்திமதியின் உடல் கண்ணம்மா பேட்டை மின் மயானத்தில் வெள்ளிக்கிழமை மாலை தகனம் செய்யப்பட்டது.
திருமணம் செய்து கொள்ளாத காந்திமதி, தன் தம்பி, தங்கை மகன்களான பாலசுப்பிரமணியன், தீனதயாளன் ஆகியோரை தத்து எடுத்து வளர்த்து வந்தார்.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காந்திமதி தொடக்கத்தில் நாடகங்களில் நடித்து வந்தார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் கதையான ‘யாருக்காக அழுதான்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி ஆகியோர் நடித்த பெரும்பாலான படங்களில் குணச்சித்திர வேடங்கள் ஏற்று புகழ் பெற்றார்.
பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த "16 வயதினிலே', "கிழக்கே போகும் ரயில்', "மண்வாசனை' உள்ளிட்ட படங்கள் அவரது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தின. 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
எம்.ஜி.ஆர்.,சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட அந்தக் கால சூப்பர் ஸ்டார்கள் முதல் ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட இந்தக் கால நடிகர்கள் வரை அனைவருடனும் நடித்த பெருமைக்குரியவர் காந்திமதி.
நடிப்பில் நகைச்சுவை, வில்லத்தனம், குணச்சித்திரம் என எந்தக் கேரக்டர் கொடுத்தாலும் அசத்துவார், அது மட்டும் இல்லை... அம்மாவாக நடித்தவர்களில் அம்மாவாகவே எல்லோரிடமும் அன்பை பொழிந்தவர் காந்திமதியம்மா என்று சொல்கிறார்கள் திரை உலகினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக