பக்கங்கள்

23 ஏப்ரல் 2013

திமிர் பிடித்த அழகி நித்யாமேனன்!

நித்தியா மேனன் 
‘‘நான் டைரக்டு செய்த நடிகைகளில், நித்யாமேனன் திமிர் பிடித்த அழகி’’ என்று டைரக்டர் சேரன் கூறினார். ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, பொக்கிஷம் போன்ற தரமான கதையம்சம் உள்ள படங்களை இயக்கிய சேரன் இப்போது, ‘ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’ என்ற புதிய படத்தை டைரக்டு செய்து வருகிறார். சர்வானந்த் கதாநாயகனாகவும், நித்யாமேனன் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். இந்த படம் தொடர்பாக டைரக்டர் சேரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– ‘‘மாயக்கண்ணாடி, பொக்கிஷம் ஆகிய படங்களின் இழப்பில் இருந்து வெளியே வருவதற்கு நான் ரொம்ப கஷ்டப்பட்டேன். அதன்பிறகு சில படங்களில் நடிக்க ஆரம்பித்தேன். என்றாலும், டைரக்டு செய்யவில்லையே என்ற ஆதங்கம் எனக்குள் இருந்து கொண்டிருந்தது. எதையோ வைத்து சுமந்து கொண்டிருந்தது போல் உணர்ந்தேன். கிராமத்து படம் எடுத்தால், ஏளனமாக பார்க்கிறார்கள். சேரனுக்கு இதுதான் வரும் என்று நினைக்கிறார்கள். அதனால் மக்கள் மத்தியில், இளைஞர்கள் மத்தியில் பேசப்படுகிற மாதிரி ஒரு படம் டைரக்டு செய்ய ஆசைப்பட்டேன். இந்த படம், வேறு ஒரு சேரனை அடையாளப்படுத்துகிற படம். தொடர்ந்து வெற்றி படம் கொடுத்தால், ஒரு மரியாதை கிடைக்கும். தோல்வி படம் கொடுத்தால், திரும்பி பார்க்க மாட்டார்கள். இது இயல்பான விஷயம். இந்த படத்துக்காக சில கதாநாயகர்களை அணுகியபோது, நிராகரித்தார்கள். நான் கோபத்தை வெளிப்படுத்தவில்லை. ஆங்கிலத்தில் கதை சொன்னால்தான் சில கதாநாயகர்கள் ‘கால்ஷீட்’ கொடுக்கிறார்கள். அவர்களுக்கு மத்தியில் என்னை நான் நிரூபித்துக் காட்ட விரும்பினேன். நல்லவர்களை ஆண்டவன் கைவிட மாட்டான். திரும்ப திரும்ப தூக்கிவிட்டுக் கொண்டிருப்பான். ஐதராபாத் போய் சர்வானந்த், நித்யாமேனன் ஆகிய இருவரையும் பார்த்தேன். இரண்டு பேருமே நிறைய கதை கேட்டவர்கள், எளிதில் படங்களை ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று கேள்விப்பட்டேன். இந்த படத்தின் கதையை கேட்டதும், இரண்டு பேரும் உடனே நடிக்க சம்மதித்தார்கள். சந்தானம் எனக்கு கொடுத்த மரியாதையைப் பார்த்து வியந்து போனேன். சாதித்து விட்டோம் என்ற கர்வம் அவரிடம் இல்லை. எங்க அம்மாவுக்கு உங்க படங்களை ரொம்ப பிடிக்கும். அவங்க, உங்க படத்தில் என்னை நடிக்கும்படி சொன்னார்கள் என்றார். நான் டைரக்டு செய்த நடிகைகளில் நித்யாமேனன், திமிர் பிடித்த அழகி. கதாபாத்திரமாக மாறக்கூடிய நடிகை. உணர்வுகளை அற்புதமாக முகத்துக்கு கொண்டு வருகிறவர்.’’ இவ்வாறு சேரன் கூறினார். பேட்டியின்போது நடிகர்கள் சர்வானந்த், கிட்டி, ஜெயப்பிரகாஷ், இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ், பாடல் ஆசிரியர்கள் நா.முத்துக்குமார், யுகபாரதி, ஒளிப்பதிவாளர் சித்தார்த் ஆகியோர் உடன் இருந்தார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக