பக்கங்கள்

14 ஏப்ரல் 2013

என் வாழ்க்கை என் கையில்-அஞ்சலி

‘‘இனி என் வாழ்க்கை என் கையில் தான். திங்கட்கிழமை முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன்’’ என்று நடிகை அஞ்சலி கூறினார்.

பரபரப்பு:
சென்னை வளசரவாக்கத்தில் சித்தி பாரதிதேவி குடும்பத்தினருடன் வசித்து வந்த நடிகை அஞ்சலி, கடந்த 8–ந்தேதி திடீரென்று வீட்டைவிட்டு வெளியேறினார். ஐதராபாத்தில் இருந்தபடி போன் மூலம் அவர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், ‘நான் இதுவரை அம்மா என்று அழைத்து வந்த பாரதிதேவி, என்னை பெற்ற அம்மா அல்ல. என் அம்மாவின் தங்கை. அவரும், டைரக்டர் களஞ்சியமும் சேர்ந்து, என்னை கொடுமைப்படுத்தினார்கள். அவர்களால், என் உயிருக்கு ஆபத்து இருந்ததால், வீட்டைவிட்டு வெளியேறினேன்’ என்று அவர் கூறினார். இந்த விவகாரம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஐதராபாத்தில் சித்தாப்பாவுடன் ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த அஞ்சலி அங்கிருந்தும் திடீரென்று மாயமானார். அவர் எங்கே இருக்கிறார், என்ன ஆனார்? என்பதும் மர்மமாக இருந்தது. காணாமல் போன அஞ்சலியை கண்டுபிடித்து தரும்படி அவருடைய சித்தி பாரதிதேவி, போலீசில் புகார் செய்தார். ஐகோர்ட்டிலும் ஒரு மனுதாக்கல் செய்தார்.

படப்பிடிப்பு:
அஞ்சலி ஏற்கனவே நடிப்பதாக ஒப்புக்கொண்டிருந்த ஒரு தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு, அவர் வராததால் ரத்து செய்யப்பட்டது. இதுதொடர்பாக படஅதிபர் சுரேஷ் ஐதராபாத் போலீசில் புகார் கொடுத்தார். இந்த நிலையில், 2 நாட்களில் நான் போலீசார் முன்பு ஆஜராவேன் என்று அஞ்சலி கூறியிருந்தார். அதன்படி அவர், நேற்று முன்தினம் இரவு ஐதராபாத் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜரானார்.

வாக்குமூலம்:
போலீஸ் கமிஷனரிடம், அஞ்சலி, ‘நான் யார் மீதும் குற்றம் சுமத்த விரும்பவில்லை. மன அழுத்தத்தை குறைப்பதற்காகத்தான் வீட்டை விட்டு வெளியேறினேன். ஐதராபாத் அருகில் உள்ள என் தோழியின் சொந்த ஊரில் சில நாட்கள் தங்கியிருந்தேன்’ என்று அவர் வாக்குமூலம் அளித்தார். இந்த சூழ்நிலையில், நடிகை அஞ்சலிக்கு, படஅதிபர் சுரேஷ் சில நிபந்தனைகளை விதித்திருக்கிறார். ‘இந்த படம் முடியும் வரை குடும்ப பிரச்சினைகளையும், சண்டைகளையும் தள்ளி வைத்துவிடு. படத்தை முடித்துக்கொடுக்கும் வரை எங்கள் அனுமதியில்லாமல் வெளியூர் செல்லக்கூடாது’ என்று நிபந்தனைகள் விதித்ததை தொடர்ந்து, அஞ்சலி ஐதராபாத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கி இருக்கிறார். அந்த ஓட்டலுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. நாளை (திங்கட்கிழமை) அவர் சென்னை வந்து கோர்ட்டில் ஆஜராவார் என்று தெரிகிறது. இந்த நிலையில், தன்னிலை விளக்கம் அளிக்கும் வகையில் நடிகை அஞ்சலி நேற்று தெலுங்கு டெலிவிஷன் சேனல்களுக்கு வீடியோ கேசட் அனுப்பி வைத்தார். டெலிவிஷனில் ஒளிபரப்பான அந்த வீடியோ கேசட்டில் அவர் கூறி இருப்பதாவது:–

மன்னிப்பு:
கடந்த சில நாட்களாக என் வாழ்க்கையில் எதிர்பாராத சில சம்பவங்கள் நடந்து விட்டன. அவை இப்போது முடிந்து விட்டன. அந்த சம்பவங்களால் என்னை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மற்றும் சக நடிகர்–நடிகைகள் ஆகியோர் மிகவும் கஷ்டப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சிரமத்தை கொடுத்ததற்காக அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னால் எழுந்த சர்ச்சைகளுக்காக மன்னிப்பு கோருகிறேன். என்னால் இனி யாருக்கும் எந்த கஷ்டமும் வராது. இக்கட்டான சமயத்தில் எனக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த ஊடகங்களுக்கும், ஆதரவு அளித்த ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடைய ஒத்துழைப்பும், ஆதரவும் எனக்கு எப்போதும் தேவை. என்னால் எனது குடும்பத்தினரும் வேதனைப்பட்டு உள்ளனர். அதற்காக வருந்துகிறேன்.

என் வாழ்க்கை என் கையில்:
இனி நான் சினிமா தொழிலில் முழு கவனம் செலுத்துவேன். இனி என் சினிமா வாழ்க்கையும், சொந்த வாழ்க்கையும் என் கையில்தான். அவற்றை நானே கவனித்துக் கொள்வேன். ஞாயிற்றுக்கிழமை (இன்று) ஓய்வு எடுத்துக்கொண்டு, திங்கட்கிழமை (நாளை) முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன். புனேயில் திங்கட்கிழமை நடைபெறும் ‘போல் பச்சன் போல்’ இந்தி படத்தின் தெலுங்கு ‘ரீமேக்’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறேன். ‘பலுப்பு’ தெலுங்கு படத்தையும் விரைவில் முடித்துக்கொடுத்து விடுவேன். இவ்வாறு நடிகை அஞ்சலி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக