ராமேஸ்வரம் பகுதி மீனவ மக்களின் வாழ்க்கையை அப்படியே பிரதிபலிக்கிறது நீர்ப்பறவை. கிளிநொச்சிப் பகுதியில் இருந்து ராமேஸ்வரம் கரைக்கு வந்த சிறுவன், அவன் வாழ்வு, காதல், கண்ணீர், மதம், குடும்பம் கடைசியாக எப்படி சாகடிக்கப்படுகிறான் என்பதை நீர்ப்பறவை காட்சிபடுத்துகிறது. ஆழமான கதாபாத்திரங்கள், அசரவைக்கும் நடிப்பு, அற்புதமான லொகேஷன், நெகிழவைக்கும் காட்சியமைப்புகள் என அனைத்து விதத்திலும் நீர்ப்பறவை பிரமிக்கவைக்கிறது.
80களில் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட ஒரு மீனவனின் கதை. ராமேஸ்வரக் கடலில் தத்தளிக்கும் ஒரு படகு, தன் குடும்பம் சுடப்பட்ட நிலையில் கிடக்க, அந்த பிணங்களைப் பார்த்தபடி ஒரு சிறுவன் அழுதுகொண்டே இருக்கிறான். அந்த படகு தமிழகத்தின் கரைவந்து சேர தமிழகத்தின் கிறிஸ்தவ மீனவர் குடும்பத்தில் மகனாய் வாழ்கிறான் அந்த சிறுவன். அம்மா அதிக செல்லம் கொடுத்து வளர்க்க, குடிபோதைக்கு அடிமையாகிறான். கைநடுக்கம் எடுத்தால் சாராயம் குடிக்க ஓடிவிடுவான்.
இப்படி மீன்பிடி தொழிலுக்குப் போகாமல் சாராயம் குடித்து ஊருக்குள் கெட்ட பேரை சம்பாதித்து வைத்தபடியே சுற்றித்திருகிறான் அருளப்பசாமி (விஷ்ணு). இந்த குடிகார அருளப்பசாமியின் வாழ்க்கையில் அதிசயமாய் வந்து சேர்கிறாள் எஸ்தர் (சுனைனா). குடிப்பதற்கு எஸ்தரிடம் அருளப்பசாமி போய் சொல்லி காசு கேட்க, அவன் சொன்னது பொய் என்பது எஸ்தருக்கு பின்னர் தான் தெரியவருகிறது.
ஊரே திட்டித்தீர்க்கும் அருளப்பசாமியின் தலையில் கைவைத்து ‘ஆண்டவரே இவரை மன்னியும், இவரை மாற்றும், இந்த மகனை உம்மிடம் ஒப்படைக்கிறோம்’ என்று ஜெபம் பண்ணுகிறாள், அந்த நொடி ஏதோ ஒரு மாற்றத்தை தனக்குள் உண்ர்கிறான் அருளப்பசாமி. அவன் திருந்தி வாழவும், சொந்தமாக ஒரு படகு வாங்கி தொழில் செய்யவும் காரணமாய் இருக்கிறாள் எஸ்தர்.
சிறுவயதிலிருந்தே தேவாலயத்தில் வளர்ந்த எஸ்தருக்கும், அருளப்பசாமிக்கும் காதல் மலர்கிறது. உருகி உருகி காதலித்தவர்கள் திருமணம் செய்துகொள்கிறார்கள். அவர்களுக்கு ஒரு மகனும் பிறக்கிறான். ஒரு நாள் அதிகாலையில் தன் மனைவியிடம் இன்னொரு குழந்தைக்கு அனுமதி கேட்க, அதெல்லாம் இப்ப முடியாது முதல்ல கடலுக்கு போங்க என்று வம்படியாக மீன்பிடிக்க கடலுக்கு அனுப்பிவைக்கிறாள். சிரித்துக்கொண்டே கடலுக்குள் சென்ற அருளப்பசாமி திரும்ப கரைக்கு வரவே இல்லை! அடுத்து என்ன நடக்கும் என்பதை நாம் ஊகிக்க முடிந்தாலும், அந்த காட்சிகள் பார்க்கும் போது இதயம் கனக்கிறது.
தன் கணவருக்கு நடந்த இந்த சோகத்தை பிளாஷ் பேக்-காக சொல்கிறார் நிகழ்கால எஸ்தர் நந்திதாதாஸ். தன் கணவரை தானே கொன்று தன் வீட்டில் புதைத்துவிட்டார் என்று நந்திதாதாஸ் குற்றம் சாட்டப்படுவதிலிருந்து துவங்குகிறது திரைக்கதை.
இலங்கை கடற்படையினறால் தமிழக மீனவர் சுட்டு கொலை என்ற செய்தி நமக்கு பழக்கப்பட்டுப் போய்யிருக்கலாம். ஒரு மீனவன் சுட்டுக்கொல்லப்பட்டான் என்ற செய்திக்குள் இவ்வளவு உணர்வுபூர்வமான ஒரு வாழ்க்கை இருப்பதை இயக்குனர் சீனுராமசாமி நமக்கு உணர்த்துகிறார். தமிழன் என்கிற ஒரே காரணத்திற்காக சுட்டுக்கொல்லப்படும் அந்த ஜீவன்களுக்கு நாம் ஒரு துளி கண்ணீர் விட நீர்ப்பறவை ஒரு வாய்ப்பாக இருக்கும் என்பதில் ஆச்சரியம் இல்லை.
படத்தில் நடித்த எல்லா கதாபாத்திரங்களுமே அப்படியே வாழ்ந்திருக்கிறார்கள் என்றே சொல்லத் தோன்றுகிறது. நல்ல நடிகர்களை தேர்வு செய்த இயக்குனருக்கு இன்னொரு சபாஷ். சரண்யா, தம்பி ராமைய்யா, நந்திதா தாஸ், சமுத்திரக்கனி, வடிவுக்கரசி, அழகம்பெருமாள், ப்ளாக் பாண்டி, ’பூ’ராம் என அனைவரும் நடிப்பில் வெளுத்துவாங்குகிறார்கள். இந்தக் கதாபாத்திரத்தை விஷ்ணுவை தவிர வேறு யாராவது இவ்வளவு நேர்த்தியாக நடித்திருப்பார்களா என்பது சந்தேகம் தான். சுனைனா அமைதியான கிறிஸ்துவப் பெண்ணாக அசத்துகிறார்.
கரைக்கு கொண்டுவரப்பட்ட சிறுவனிடம் நீ எந்த ஊருப்பா என்று கேட்க, அவன் கிளிநொச்சி என்று பதில் சொன்னதும் ‘யார் வீட்டு மகனோ மகனோ, தாய்வீடு வந்தது பிள்ளை...’ என்று வைரமுத்துவின் வரிகள் இசையாய் வந்து விழும் நேரம் இதயத்தில் மழையடிக்கிறது. மதம் வெவ்வேறாக இருந்தாலும் மனிதர்கள் ஒற்றுமையாய் இருக்கிறார்கள் என்பதை மிகவும் நேர்த்தியாக காண்பித்திருக்கிறார் இயக்குனர்.
இஸ்லாமியராக இருக்கும் சமுத்திரக்கனியிடம் ‘நான் கும்பிடுகிற ஏசய்யாவா உங்கள நெனைகிறேன்’ என்று விஷ்ணுவின் அப்பா உதவி கேட்பதும், விஷ்ணுவுக்கு படகு செய்துகொடுக்கும் சமுத்திரக்கனி அதில் ‘தேவனுக்கே மகிமை’ என்று எழுதி வைப்பதும் எதார்த்தங்களாக இருந்தாலும் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. விஷ்ணுவின் குடிபழக்கத்தை குணமாக்கும் மருத்துவர் நெற்றியில் விபூதி வைத்திருப்பதையும், அந்த மருத்துவமனையில் காஞ்சி சங்கராச்சாரியாரின் போட்டோ இருப்பதையும் நாம் கவனிக்கமுடிகிறது. அவருக்கு விஷ்ணுவின் அப்பா ஒரு பெரிய மீனை பரிசாக கொடுக்கும் காட்சி நெகிழவைக்கிறது.
ஜெயமோகனின் வசனங்கள் பல இடங்களில் பளிச்சிடுகிறது. மீனவன சுட்டுக் கொன்னுடா, பத்திரிக்கையில கூட இந்திய மீனவன்னு போடாம தமிழக மீனவன்னு தலைப்பப் போட்டு மேட்டரை முடிச்சுடறாங்க என்பதும், என் கணவர் உடம்பு மட்டும் தான் கரைக்கு வந்தது, உயிர் கடலுக்குள்ள தான் இருக்கு என்று நந்திதாதாஸ் சொல்வதும் நச் வசனங்கள். குடிப்பழக்கத்தை ஒருத்தன் நிறுத்திட்டான்னா, ஒன்னு அவனுக்கு அல்சர் வந்திருக்கும் இல்ல, காதல் வந்திருக்கும் என்று ஜோசப் பாரதி என்ற கதாபாத்திரத்தில் வரும் தம்பி ராமைய்யா அடிக்கடி காமெடி வெடி போடுகிறார்.
நிறம் மாறும் கடலை நிஜம் மாறாமல் படம்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம். எத்தனையோ மசாலா படங்களை தயாரித்திருந்தாலும் ‘நீர்ப்பறவை’ படத்தை தயாரித்ததால் உதயநிதியின் மேல் மரியாதை அதிகரிக்கிறது.
எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமல் தமிழன் என்ற காரணத்திற்காக சுடப்படும் மீனவர்களுக்கு ஒரு நிரந்தர தீர்வை அரசாங்கமே எடுக்க முடியாத நிலையில், நீர்ப்பறவை திரைப்படத்தில் என்ன சொல்லிவிட முடியும். இருந்தாலும் தமிழ் சினிமாவின் பார்வை இதன் மீது திரும்பி இருப்பது பாராட்டுக்குறியது.
எவ்வளவோ ரத்தம் பார்த்துவிட்ட தமிழனுக்கு ஒரு துளி கண்ணீராய் ஆறுதல் தருகிறது நீர்ப்பறவை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக