பக்கங்கள்

23 ஜூன் 2014

இயக்குநர் ராம நாராயணன் மரணம்!

உலக சாதனை படைத்த இயக்குநர் ராம நாராயணன் மரணம்... அதிர்ச்சியில் தமிழ் சினிமா!பிரபல திரைப்பட இயக்குநரான ராம. நாராயணன் மாரடைப்பால் காலமானார். சிங்கப்பூரில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் அங்கு மரணமடைந்துள்ளார். 9 மொழிகளில் 125 படங்களை இயக்கி சாதனை படைத்தவர் ராம.நாராயணன். இந்தியாவிலேயே அதிக படங்களை இயக்கிய இயக்குநர் இவர்தான்.குறிப்பாக விலங்குகளை வைத்தும், கிராபிக்ஸ் மூலமும் பல படங்களை இயக்கி அனைவரையும் ரசிக்க வைத்தவர். விஜயகாந்த்துக்கு ஆரம்ப காலத்தில் ஏற்றம் கொடுத்த பல படங்களை இயக்கியவர். சர்க்கரை வியாதி மற்றும் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவரை சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்துச் சென்றிருந்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாரடைப்பால் மரணமடைந்தார். ராம நாராயணனிடம் உதவியாளராக இருந்தவர்தான் நடிகர் ராமராஜன். ஆரம்பத்தில் உதவி இயக்குநராக இருந்து பின்னர் இயக்குநராக மாறி அதன் பின்னர் ராமராஜன் நடிகரானார் என்பது நினைவிருக்கலாம். இதேபோல இன்னொரு சிஷ்யர் இயக்குநர் பேரரசு. ராம நாராயணனின் 30 படங்களில் பேரரசு உதவி இயக்குநராக இருந்துள்ளார். 1989-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ராம.நாராயணன் காரைக்குடி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1990-ம் ஆண்டு தமிழக அரசின் `கலைமாமணி' விருது இவருக்கு கிடைத்தது. 1995-ம் ஆண்டு இயல், இசை, நாடக மன்ற தலைவராக பதவி வகித்தார். 2005-ம் ஆண்டு முதல் திரைப்பட தணிக்கை குழு உறுப்பினராக இருந்து வருகிறார். ராம.நாராயணனின் மனைவி பெயர் ராதா. மகன் ராமசாமி. மகள்கள் அன்பு, உமா. அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

16 ஜூன் 2014

இனியா வீட்டில் திருடி மாட்டிய அக்கா கணவன்!

இனியா
இனியாவின் அக்கா சுவாதிக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையே, அவர் வீட்டில் கொள்ளையடித்தது அம்பலமாகியுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த மாப்பிள்ளையை கைது செய்து 'மாமியார் வீட்டுக்கு' அனுப்பினர் போலீசார். தமிழில் பிரபல நடிகையாகத் திகழும் இனியா, கேரளாவைச் சேர்ந்தவர். இவரது சொந்த ஊர் திருவனந்தபுரம் கரமணை அருகே உள்ள மருதூர்க்க கடவு கிராமம்.இனியாவுக்கு சுவாதி என்ற அக்கா உள்ளார். மலையாள டி.வி. தொடர்களில் நடித்து வருகிறார். நடிகை சுவாதியும் ஷாபின் (வயது 32) என்பவரும் காதலித்து வந்தனர். ஷாபின் தங்கள் அளவுக்கு வசதியான குடும்பத்தை சேர்ந்தவர் அல்ல என்பதால் நடிகை இனியாவின் பெற்றோர் ஆரம்பத்தில் இந்த காதலை ஏற்கவில்லை. ஆனால் ஷாபினைத்தான் திருமணம் செய்வேன் என்று உறுதியாக சுவாதி இருந்ததால் வேறு வழியின்றி கடந்த மே 29 - ந் தேதி, நடிகை சுவாதி - ஷாபின் திருமண நிச்சயதார்த்தம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு பெரிய நட்சத்திர ஓட்டலில் கோலாகலமாக நடந்தது. இருவருக்கும் இந்த மாத இறுதியில் திருமணம் செய்யவும் முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி நடிகை இனியா குடும்பத்தினர் இரவுக் காட்சி படம் பார்க்க சென்ற போது, அவர்களது வீட்டில் இருந்த ரூ.5 லட்சம் ரொக்கம் மற்றும் 10 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இதுபற்றி கரமணை போலீசில் புகார் செய்தனர் இனியா குடும்பத்தினர். திருவனந்தபுரம் துறைமுக உதவி போலீஸ் கமிஷனர் ஸ்ரீகுமார் தலைமையிலான போலீஸ் படையினர் இந்த கொள்ளை பற்றி தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது இந்த கொள்ளையில் ஈடுபட்டது நடிகை இனியாவின் அக்கா சுவாதிக்கு நிச்சயிக்கப்பட்ட ஷாபின்தான் என்ற உண்மை வெளியாகி, அதிரவைத்தது. உடனடியாக போலீசார் ஷாபினையும் அவருக்கு உதவிய அவரது நண்பர் சஜியையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க, சுவாதியைப் பயன்படுத்த ஷாபின் முயன்றது தெரிய வந்தது. சுவாதியுடன் நிச்சயதார்த்தம் முடிந்ததுமே, அந்த வீட்டில் பணம், நகையைக் கொள்ளையிட திட்டமிட்டுள்ளார். முதலில் வீட்டுச் சாவியைத் திருடி, அதை வைத்து போலி சாவி தயாரித்துள்ளார். பின்னர் அந்த சாவியை தன் கூட்டாளிகள் சஜி, ராஜன், சஜு ஆகிய மூவரிடமும் கொடுத்து வைத்திருந்தார்.கொள்ளையடிக்க ஒரு நாளைத் தேர்வு செய்தவர், அந்த நாளில் இனியா, சுவாதி மற்றும் குடும்பத்தினர் அனைவருடனும் இரவுக் காட்சி சினிமா பார்க்க சென்றுள்ளார். வீட்டில் யாருமில்லாத அந்த மூன்று மணி நேரத்துக்குள் பக்காவாக திட்டத்தை அரங்கேற்றியுள்ளார். கொள்ளையடித்த பணத்தில் ஷாபினுக்கு வந்த பங்கு ரூ.2 லட்சத்து 51 ஆயிரமாம். மீதியை கூட்டாளிகள் பிரித்துக் கொண்டார்களாம். போலீஸ் விசாரணையில் இந்த உண்மைகளைக் கக்கியுள்ளார் ஷாபின். அவரையும் அவர் கூட்டாளி சஜியையும் கைது செய்துள்ள போலீஸ், தலைமறைவாக உள்ள ராஜன் மற்றும் சஜூவைத் தேடி வருகின்றனர். இந்த கொள்ளை மூலம், நடிகை சுவாதி திருமணம் ரத்தாக வேண்டிய நிலைக்கு வந்துவிட்டது.

13 ஜூன் 2014

ஸ்ருதியின் அறைக்கதவு தட்டப்பட்டதால் பரபரப்பு!

ஸ்ருதி
டேராடூனில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த நடிகை ஸ்ருதி ஹாஸனின் அறைக் கதவை ரசிகர் ஒருவர் குடிபோதையில் தட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை ஸ்ருதி ஹாஸன் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் திக்மான்ஷு துலியாவின் யாரா என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் நடந்தது.இதற்காக ஸ்ருதி டேராடூனில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்நிலையில் நள்ளிரவில் ஹரியானா மாநிலம் சிர்சா நகரைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் குடிபோதையில் ஸ்ருதி தங்கிய அறையின் கதவை தட்டிக் கொண்டே இருந்துள்ளார். இதனால் பதட்டமடைந்த ஸ்ருதி இந்த சம்பவம் குறித்து முசோரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஸ்ருதியை நீண்ட நாட்களாக பின் தொடர்ந்த ஒருவர் மும்பை பந்த்ரா பகுதியில் இருந்த அவரது வீட்டுக்கே வந்து தாக்கினார். இதையடுத்து ஸ்ருதி மும்பை அந்தேரி பகுதியில் புதிய வீடு ஒன்றை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

05 ஜூன் 2014

தீவிர சிகிச்சைப் பிரிவில் நடிகை மனோரமா!

மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள மனோரமாவுக்கு, தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நடிகை மனோரமா மூச்சுத்திணறல் காரணமாக, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இரு தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகை மனோரமாவுக்கு 2 ஆண்டுகளுக்கு முன் முழங்கால் அறுவைச் சிகிச்சை நடந்தது.பின்னர் காளஹஸ்தி கோவிலுக்கு சென்றிருந்தபோது, குளியல் அறையில் தவறி விழுந்தார். அப்போது அவருடைய தலையில் காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார். ஆனால் இந்த சம்பவத்துக்குப் பிறகு அவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. கடந்த மார்ச் மாதம் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர், கடந்த மாதம் 26ந் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்த நிலையில், தற்போது மீண்டும் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். டாக்டர்கள் அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். மனோரமா உடல் நிலை ஆபத்தான கட்டத்தில் இல்லை என்றும், இன்னும் இரு தினங்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.