பக்கங்கள்

12 செப்டம்பர் 2019

லொஸ்லியாவிடம் கண்டிப்பு காட்டிய தந்தை மரியநேசன்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் (புதன்கிழமை) வீட்டுக்குள் வந்த போட்டியாளர் லொஸ்லியாவின் தந்தை மரியநேசன் தன் மகளிடம் மனம் குமுறி கலங்கியதும், லொஸ்லியாவிடம் ஒரு கண்டிப்பான தந்தையாக நடந்து கொண்ட விதமும் சமூக ஊடகங்களில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில், தற்போது ஏழு போட்டியாளர்களே எஞ்சியுள்ளனர். 75 நாட்கள் கடந்த நிலையில், பிக் பாஸ் 3 போட்டி முடிய இன்னும் சில வாரங்களே உள்ளன. இச்சூழலில், போட்டியாளர்களின் முக்கிய குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து போட்டியாளர்களை ஆச்சரியப்படுத்தி வருகின்றனர். இந்த வார தொடக்கத்தில், மலேசியாவை சேர்ந்த போட்டியாளர் முகேன் ராவின் தாய் மற்றும் தங்கையை வீட்டுக்குள் அனுப்பி ஆச்சரியப்படுத்தினார் பிக் பாஸ். 75 நாட்கள் கழித்து தாய் மற்றும் தங்கையை பார்த்த மகிழ்ச்சியில் முகேன் ராவ் மட்டுமின்றி சக போட்டியாளர்களும் முகேனோடு கண் கலங்கினர்.முகேன் ராவ்வை தொடர்ந்து, பிக் பாஸ் வீட்டுக்குள் லொஸ்லியாவின் குடும்பத்தாரை பிக் பாஸ் அனுப்பி வைத்தார். அதற்கு முன்னதாக, கடந்த வாரம் ரகசிய அறைக்கு அனுப்பப்பட்ட இயக்குநர் சேரன் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தார். தொடர்ந்து, லொஸ்லியாவின் தாய் மற்றும் தங்கைகள் மட்டுமின்றி கனடாவில் பணியாற்றி வந்த தந்தை மரியநேசனும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர். பல நாட்கள் கழித்து தந்தையை பார்த்த மகிழ்ச்சியில் கதறி அழுதார் லொஸ்லியா. மகளை கட்டியணைத்து தேற்றினார்.லொஸ்லியாவை தேற்றிவிட்டு சக போட்டியாளர்கள் முன்னிலையிலேயே குமுறிய மரியநேசன், "என்னிடம் என்ன சொல்லி நீ வந்த, நான் உன்னை அப்படியா வளர்த்தேன், இதைப்பற்றி பேசக்கூடாது, நான் உன்னை அப்படி வளர்க்கவில்லை. தலைகுனிஞ்சு வாழக்கூடாதுன்னு சொன்னேன். ஆனா, மற்றவங்க காறி துப்புறதை என்னை பாக்கவச்சிட்ட," என்று தழுதழுத்தார் மரியநேசன்.மரியநேசனை சமாதானப்படுத்தினார் இயக்குநர் சேரன். லொஸ்லியா தந்தை ஆதங்கப்பட்டதை பார்த்து ஓரமாக அமைதியாக நின்றிருந்தார் கவின், குற்ற உணர்ச்சியில் வீட்டுக்குள் சென்ற கவின் ஒருபக்கம் அழத் தொடங்கினார்.கனடாவில் தன்னோடு வேலைப்பார்க்கும் சக நண்பர்கள்கூட முகத்துக்கு நேராக லொஸ்லியாவை பற்றி கிண்டல் பேசுவதாக குறிப்பிட்ட மரியநேசன், மகளை வைத்து காசு பார்க்க விஜய் டிவிக்கு அனுப்பிவிட்டாயா என்று தனது நண்பர்கள் கேள்விகேட்டதாகவும், மகளோட கல்யாணத்துக்கு போறியா என்று கேலி பேசுவதாகாவும் லொஸ்லியாவிடன் சொல்லி ஆதங்கப்பட்டார் அவர். மேலும், லொஸ்லியாவுக்கு ஆலோசனை வழங்கிய அவர், "பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தபோது எப்படி இருந்த... உனக்கு யாரையுமே இங்க தெரியாது. இப்பவும் அப்படியே இரு. எல்லார்கிட்டையும் நல்லா பேசு. அதுக்குன்னு பேசாமலும் இருந்துடாத. முக்கியமா பிக் பாஸை ஒரு விளையாட்டா பாரு. இந்த நிகழ்ச்சிக்கு வரும் முன்னாடி என்கிட்ட என்ன சொன்ன... அப்பா பிக் பாஸ்ல கலந்துகிட்டு கெத்தா வெளியே வருவேன்னு சொன்ன... அப்படி கெத்தா வெளியே வரணும். நம்ம மக்கள் இப்படியும் பேசுவாங்க, அப்படியும் பேசுவாங்க. நானும், அம்மாவும் எப்போதும் உனக்கு ஆதரவா இருப்போம். ஆனா, ஒழுங்கா வந்த வேலையை மட்டும் பார்க்கணும்," என்றார். கமல் ஹாசன் முன்னிலையில் லொஸ்லியா கால் மீது கால் போட்டு உட்காருவதை மரியநேசன் சுட்டிக்காட்டியதற்கு, தான் நிகழ்ச்சியின் ஆரம்பம் முதலே அப்படித்தான் அமர்ந்திருப்பதாகவும், கமல் ஹாசன் மீதான மரியாதை எப்போதும் மனதில் இருப்பதாகவும் அதுவே போதும் என்று தந்தையிடம் கூறினார் லொஸ்லியா.இந்த பிரச்சனை குறித்து லொஸ்லியாவின் தந்தையிடம் கவின் மன்னிப்பு கேட்ட நிலையில், தனக்கு யார் மீதும் எந்த கோபமும் இல்லை என்றும், இந்தப் போட்டியில் யார் வெற்றி பெற்றாலும் தனக்கு மகிழ்ச்சித்தான் என்றும் தெரிவித்தார் மரியநேசன். ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒரு தந்தையின் ஆதங்கத்தை மரியநேசன் வெளிப்படுத்தியதாக இணையத்தில் பலர் கருத்து தெரிவித்திருந்தனர். ட்விட்டரிலும் மரியநேசன் குறித்து பல விவாதங்களும் நடைபெற்றன.நேற்றைய நிகழ்ச்சியில் கவின் அழுததை தொடர்ந்து, இணையத்தில் #Staystrongkavin என்ற ஹாஷ்டேக் இந்தியளவில் டிரெண்டானது. இந்த டிரெண்டுக்கு கவின் ரசிகர்கள்தான் காரணம். பலர் கவினுக்கு ஆதரவாக ட்வீட்களை பதிவிட்டனர். சிலர், எதோ ஒரு தருணத்திலாவது லொஸ்லியா கவினுக்கு ஆதரவாக இருந்திருக்க வேண்டும் என்று சிலர் தெரிவித்திருந்தனர்.இன்னும் வரக்கூடிய நாட்களில், போட்டியாளர்கள் தர்ஷன், சேரன், வனிதா, ஷெரீன் மற்றும் சாண்டி ஆகியோரின் குடும்ப உறுப்பினர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் வருகைதர உள்ளனர்.

நன்றி:பிபிசி தமிழ்